இண்டிகோ விமான மேலாளர் பாட்னாவில் சுட்டுக்கொலை

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 20:34

பாட்னா,

இண்டிகோ விமான நிறுவனத்தின் விமான நிலைய மேலாளர் ரூபேஷ் குமார் சிங் (42) செவ்வாய்க்கிழமை பாட்னா விமான நிலையத்திலிருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பைக்கில் வந்த இரு நபர்கள் ரூபேஷ் குமாரை அவர் வசிக்கும் காலனியின் வாசலுக்கு வெளியே சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் பாட்னாவின் புனைச்சக் பகுதியில் உள்ள குசூம் விலாஸ் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்தது.

குமார் உடனடியாக போலீசாரால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். ரூபேஷ் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு கோவாவில் விடுமுறைக்கு சென்றுவிட்டு திரும்பியதாக கூறப்படுகிறது.

இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‘‘எங்கள் பாட்னா விமான நிலைய மேலாளரின் மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும் அன்பானவர்களுடனும் உள்ளன. நாங்கள் அவருடைய குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டுள்ளோம், மேலும் அவர்களுக்கு எங்கள் முழு ஆதரவையும் வழங்குகிறோம். தற்போதைய விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம்" என தெரிவித்துள்ளது.

தேஜஸ்வி யாதவ் சாடல்

இந்த சம்பவம் தொடர்பாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஷ்வி யாதவ் ஆளும் கட்சியின் முதல்வர் நிதீஷ் குமாரை அவதூறாக பேசியதுடன், பீகார் அரசு இப்போது "குற்றவாளிகளின் கைகளில்" உள்ளது என்று சாடினார்.

மேலும் ரூபேஷ் குமார் அரசால் பாதுகாக்கப்பட்ட குற்றவாளிகளால் கொல்லப்பட்டார் என்றும் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

"மாநில அரசால் பாதுகாக்கப்பட்ட குற்றவாளிகள் விமான நிலைய மேலாளர் ரூபேஷ் குமார் சிங்கை அவரது இல்லத்திற்கு வெளியே கொன்றனர். அவர் மரியாதைக்குரியவராகவும் அனைவருடன் நட்பாகவும் இருந்தார். அவரது அகால மரணத்தால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்" என்று தேஜஷ்வி யாதவ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

"இப்போது குற்றவாளிகள் பீகாரில் அரசாங்கத்தை நடத்துகிறார்கள்," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

மறுபுறம், பாஜக எம்.பி. விவேக் தாக்கூரும் இந்த சம்பவம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார். ரூபேஷ் குமார் போன்ற ஒரு சாதாரண மனிதர் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த கவலைக்குரிய விஷயம் என்று விவேக் தாகூர் தெரிவித்துள்ளார்.