போலியோ சொட்டு மருந்து வழங்குதல் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 12:54

புதுடெல்லி

தேசிய அளவில் போலியோ சொட்டு மருந்து ஜனவரி 17-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுவது வழக்கம் இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் மாநிலங்களுக்கு ஜனவரி 9ஆம் தேதி எழுதிய கடிதத்தில் இந்த ஒத்திவைப்பு பற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 8ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன்

வழக்கமாக நடத்தப்படுவது போல போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு தரும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறும். இந்த ஆண்டும் ஜனவரி 17ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.

ஆனால் ஜனவரி 9ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி ஜனவரி 17-ஆம் தேதி நடைபெறாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் எல்லா மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியது.

கரோனா வைரஸ் தடுப்பூசி போடும் முதல்கட்ட நிகழ்ச்சி ஜனவரி மாதம் 16ஆம் தேதி தேசிய அளவில் துவங்குகிறது.

கரோனா வைரஸ் தடுப்பூசி போடும் நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.