சீனாவால் ஏற்படும் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய பாஸ்போர்ட் வெளியிட்ட தைவான்

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2021 19:24

தாய்பேய்,

சீனாவால் ஏற்படும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் தைவான் அரசு புதிதாக வடிவமைக்கப்பட்ட பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

சீனாவுக்கு அருகே உள்ள குட்டி தீவு நாடான தைவான் தங்கள் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதி என சீன அரசு சொந்தம் கொண்டாடி வருகிறது. தேவைப்பட்டால் அடக்குமுறை பயன்படுத்தி தைவானை கைப்பற்றுவோம் என்றும் எச்சரித்துள்ளது.

ஆனால் சீன அரசின் ஆட்சிக்குள் வர மறுக்கும் தைவான் தன் சுய அடையாளத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது. சீன அடக்குமுறையை எதிர்கொள்ள தனது ராணுவ பலத்தை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தைவானுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா அந்நாட்டுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில் தைவான் அரசு தங்கள் நாட்டின் அடையாளத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஒருபகுதியாக புதிய பாஸ்போர்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய பாஸ்போர்ட்டில் தைவான் என்ற பெயர் பெரிதாக ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது. சீன குடியரசு பெயர் சீன மொழியில் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது.

பழைய பாஸ்போர்ட்டில் சீன குடியரசு பெயர் மேலேயும் தைவான் பெயர் கிழேயும் ஆங்கிலத்தில் பெரிதாக அச்சிடப்பட்டிருக்கும். இதனால் சர்வதேச அளவில் தைவான் மக்கள், சீனர்கள் என தவறாக அடையாளம் காணப்பட்டு பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன.

குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் தைவானை சேர்ந்த பலருக்கு வெளிநாடுகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் சீனர்கள் என தவறாக அடையாளம் காணப்பட்டதே இந்த குழப்பத்திற்கு காரணம்.

இந்த பிரச்சனைக்கு முடிவுக்கட்ட தைவான் பெயர் பெரிதாக அச்சிடப்பட்டிருக்கும் புதிய பாஸ்போர்டை தைவான் அரசு வெளியிட்டுள்ளது. இந்த புதிய பாஸ்போர்ட் மூலம் இனி தைவான் மக்கள் சீன குடியரசுக்கு உட்பட்டவர்கள் என தவறாக அடையாளம் காணப்பட மாட்டார்கள் என தைவான் அரசு தெரிவித்துள்ளது.

தூதரக விவகார இயக்குநர் ஜெனரல் ஃபோப் யே கூறுகையில்,  ‘‘திங்கள்கிழமை நள்ளிரவு நிலவரப்படி, புதிய பாஸ்போர்ட்டுக்கு 700 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. தைவானின் தெரிவுநிலையை அதிகரிப்பதே இதன் நோக்கம். இதனால் அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது சீனாவிலிருந்து வருகிறார்கள் என்று எங்கள் மக்கள் தவறாக அடையாளம் காணப்பட மாட்டார்கள்," என்று ஃபோப் யே கூறினார்.

தைவான் மக்கள் இந்த புதிய பாஸ்போர்ட்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சீனா கண்டனம்

தைவான் அரசு புதிய பாஸ்போர்ட்டை வெளியிட்டத்தற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தைவானின் மிக அற்பத்தனமான நடவடிக்கை. தைவான் எப்போதும் சீனாவின் ஒரு பகுதியாக நீடிக்கும் என சீன அரசு தெரிவித்துள்ளது.