மோடி பாராட்டிய முன்னோடி ஆசிரியர்

பதிவு செய்த நாள் : 09 ஜனவரி 2021

பாரத பிரதமர் மோடி தான் பதவியேற்றதில் இருந்து ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை  11 மணிக்கு அகில இந்திய வானொலியில் மனதின் குரலில் (மான் கி பாத்) என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்காகப் பேசி வருகிறார்.

பிரதமர் தனது உரையில் தொடாத துறையே இல்லை எனலாம். பல்வேறு துறைகளில் சேவை மனப்பான்மையுடன் தனித்துவ முறையில் செயல்படுகிறவர்களை குறிப்பிட்டு பாராட்டிப் பேசி வருகிறார்.

கடந்த 2020 டிசம்பர் 27ம் தேதி உரையாற்றிய போது "விழுப்புரத்தில் ஒரு ஆசிரியர் பள்ளியில் உலகின் தொன்மையான மொழியாகிய தமிழை பயிற்றுவித்து வருகிறார். இந்த கொரோனா காலத்திலும் தன் பணிக்கு இடையூறு ஏற்படா வண்ணம் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். உண்மையில் இதில் சாவல்கள் இல்லாமல் இல்லை. இதையெல்லாம் சமாளிக்க ஒரு நு£தன வழிமுறையொன்றை கையாண்டு இருக்கிறார்.

53 பாடங்களையும் அனிமேஷனாக மாற்றி பென்டிரைவ்வில் காப்பி செய்து தன் மாணவர்களுக்கு கொண்டு போய் சேர்த்திருக்கிறார். இதனால் இவரது மாணவர்கள் பயன் பெற்று கொண்டிருக்கிறார்கள். பாடங்களை அனிமேஷனாக பார்க்கும் போது அவர்களுக்கு எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. அதோடு தன் மாணவர்களுடன் தொலைபேசி வாயிலாகவும் தொடர்பு கொண்டும் பேசுகிறார். இவையெல்லாம் மாணவர்களுக்கு பாடத்தின் மீது ஓர் ஈர்ப்பை உண்டாக்கி இருக்கிறது.

கொரோனா காலத்தில் நாடெங்கும் பணியாற்றும் ஆசிரியர்களில் சிலர் நூதன முறையை கையாண்டு படைப்புத்திறனோடு பாடங்களை அளித்துள்ளனர். விலை மதிப்பில்லா இப் பாடங்கள் அனைத்தும் கல்வி அமைச்சகத்தின் தீக்ஷா தளத்தில் கண்டிப்பாக பதிவேற்றம் செய்யுங்கள் என அனைத்து ஆசிரியர்களிடமும் கேட்டுகொள்கிறேன் என்று அரசுப் பள்ளி தமிழாசிரியை ஹேமலதாவை குறிபிட்டு தன் உரையை நிகழ்த்தினார் மோடி.

ஹேமலதா விழுப்புரம் மாவட்டம் செ.குன்னத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி தமிழ் ஆசிரியர்.
ஆசிரியர் தொழிலையும் தாண்டி சமூகத்திற்கு சேவை புரிவதிலும் அதிக நாட்டம் கொண்ட எளிய பெண்மணி. கஜா புயல் மற்றும் இயற்கை சீற்றங்களின் போதும், கொரோனா தொற்று உச்சத்திலிருந்த போதும் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு ஆதரவாக பாடுபட்டவர்.. அதுவும் போக்குவரத்துக்கு முற்றிலும் தடை இருந்த ஊரடங்கு காலத்தில் தனது இரு சக்கர வாகனத்தில்

 பல கிலோமீட்டர் சுற்றி திரிந்து வறுமை நிலையிலிருக்கும் மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் போன்ற அத்தியவாசிப் பொருட்களை வழங்கி மருத்துவ உதவியும் செய்து வந்துள்ளார்.

ஆசிரியை ஹேமலதாவுக்கு தமிழ்நாடு அரசு நல்லாசிரியர் விருது வழங்கி கவுரத்திருக்கிறது.

ஹேமலதா தினந்தோறும் இருசக்கர வாகனத்தில் 52 கிலோமீட்டர் பயணித்து பள்ளிக்கு சென்று வருகிறார். அப்படி சென்று வரும் சமயத்தில் ஒரு நாள் வழியில் பல பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் அவர்களின் வசிப்பிடத்திற்கு சென்று அவர்களின் பெற்றோரிடம் பேசி சீருடைகள், காலணிகள், நோட்டு புத்தகங்களை வாங்கிக் கொடுத்து  பள்ளியில் சேர்த்திருக்கிறார். இன்று அவர்களில் பல பேர் பிளஸ் டூ படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சமூக சேவையாற்றி வரும் ஆசிரியர் ஹேமலதாவை சந்தித்து பேசினோம்..

 "1992ம் ஆண்டு அரசு நிதியுதவி பெறும் மகாத்மா காந்தி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிய வேலை கிடைத்தது.

1996ல் அரசு பள்ளியில் வேலை கிடைத்தது. 2012ம் ஆண்டு பட்டதாரி தமிழ் ஆசிரியராக பணி உயர்வு கிடைத்தது. விழுப்புர மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்து இருக்கிறேன். கடந்த ஒன்பது ஆண்டுகளாக செ. குன்னத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறேன்.

ஆசிரியராக பணிபுரிய ஆரம்பித்தபோது மனதில் இரண்டு உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டேன். ஆசிரியர் வேலை என்பது சாதாரண பணியல்ல, ஒரு நல்ல சமூகத்தை கட்டமைக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. அதிலிருந்து துளியளவும் நாம் விலகக்கூடாது.

மற்றொன்று மாணவர்களுக்கும் எனக்குமான உறவு வகுப்பறையையும் தாண்டி இருக்க வேண்டுமென்று நினைத்தேன்.

மாணவர்களுக்கு பாடத்தில் எழும் சந்தேகங்களை மட்டும் போக்குவது ஆசிரியர்களின் பணி அல்ல. அதையும் தாண்டியதுதான் ஆசிரியர் பணி. அவர்களின் வாழ்வில் எழும் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் கண்டு அவர்கள் தெளிவு பெற உதவுவதும் ஆசிரியரின் வேலைதான். அதில் துளியளவும் பிசகாமல் செயலாற்றி வருகிறேன். அதோடு கடந்த 25 ஆண்டுகளாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆலோசராகவும் இருக்கிறேன். அங்கே வரும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பிரச்னையை மனம் திறந்து பேச வைத்து அவர்களுக்கு தக்க ஆலோசனைகளையும் வழங்குகிறேன்.

எனக்கும் மாணவர்களுக்கு இடையே உணர்வுபூர்வமாக கிடைத்த அனுபவங்களைத்தான் அங்கு பயன்படுத்தி வருகிறேன். விழுப்புரம் மாவட்டம் பொதுத் தேர்வில் மாணவர்களின் வெற்றி சதவீதம் மிகவும் குறைவாகவே இப்பொழுதுவரை உள்ளது. அப்படியிருந்தும் கடந்த ஒன்பது ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொது தேர்வில் எங்கள் பள்ளியில் தமிழில் மட்டும் மாணவர்கள் 100 சதவிகித தேர்ச்சி பெற்று வருகிறார்கள்.

கொரோனா காலத்தில்- இந்த கல்வியாண்டில் இருந்து ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் மற்றும் கற்பித்தலை உபகரணங்கள் வாயிலாக எளிமைப்படுத்த வேண்டும் நினைத்தேன். அதற்கான உபகரணங்களை வீட்டிலேயே தயாரித்துக் கொண்டிருந்தேன். ஆனால் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் நழுவிக் கொண்டே போவதால் அப் பணிகளை நிறுத்தி விட்டேன். அதற்கு பதிலாக 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென யோசித்தேன்.

தற்போதைய பாடத்திட்டம் புதியது என்பதால் இது மாற இன்னும் ஐந்தாறு ஆண்டுகள் ஆகலாம், என்பதால் கொஞ்சம் செலவு செய்து அனிமேஷன் முறையில் பாடங்களை மாற்றி வீடியோவாக தயாரித்து மாணவர்களுக்கு அளிக்கலாமே என்ற யோசனை தோன்றியது. அதற்கான வேலையில் இறங்கியபோதுதான் ஷாகுல் ஹமீது என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர் என்னுடைய முன்னாள மாணவர் என்பதால் இன்னும் வசதியாகப் போனது.

இதற்கான பணியில் முழுமூச்சாக இறங்கினேன். நான் உட்பட ஐந்து பேர் பாடப்புத்தகத்தை கையில் வைத்துகொண்டு இரவு பகல் பாராமல் அதற்கான தகுந்த படங்களை தேடி அலைந்து கண்டு பிடித்தோம். அவற்றை எல்லாம் அனிமேஷனாக மாற்றி பென்டிரைவ்களில் காப்பி செய்தோம். தமிழக அரசு வழங்கிய இலவச மடிக்கணினி எல்லா மாணவர்களிடத்தில் இருந்ததால் மேலும் வசதியானது.

 மாவட்ட கல்வித்துறை இயக்குநர் மூலம் பென்டிரைவ்களை மாணவர்களுக்கு கொடுத்தோம். அதை ஒப்பன் செய்து பாடத்தை படிக்க முற்பட்ட மாணவர்களுக்கு எளிமையாக அனிமேஷன் பட வடிவில் பாடம் இருந்ததால் அவர்களுக்கு பாடம் எளிதாக புரிந்தது. மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இது ஊடகங்களில் செய்தியாக வெளிவந்தது. உண்மையில் இந்த செயல்முறை பயனுள்ளதாக இருக்கிறதா? என்பதை ஆய்வு செய்ய உதவி ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் வந்ததர்கள். அவர்கள் மேலும் மாணவர்களின் இல்லங்களுக்கு சென்று பாடப்புத்தகத்தை படிக்க சொல்லியும் இந்த அனிமேஷனை பார்க்க சொல்லியும் இதில் உங்களுக்கு எது எளிதாக புரிகிறது என அவர்களிடம் கேட்டு கள ஆய்வும் செய்தார்கள். அதில் மாணவர்கள் அனிமேஷன் வடிவத்திலுள்ள பாடம்தான் எங்களுக்கு எளிதாக புரிகிறது. அதை மனப்பாடம் செய்யாமலே அதிலிருந்து எந்த கேள்விகேட்டாலும் எங்களால் எளிதாக பதில் அளிக்க முடியும் என சொல்லியிருக்கிறார்கள்.

அதன் பிறகுதான் பிரதமர் வானொலியில் என் செயலை பாராட்டிப் பேசினார். அவரின் ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு பரிசு அளித்தது போல் இருக்கிறது. இதனால் அரசு பள்ளி ஏழை மாணவர்களுக்கு இன்னும் ஏதாவது செய்ய வேண்டுமென்ற உந்துதல் எழுகிறது" என்கிறார் புன்னகையுடன் ஹேமலதா.

தமிழ் பாடங்களுக்கு தனிப்பட்ட ஆசிரியர் என்ற வகையில் முன்முயற்சி எடுத்து கற்றலையும் கற்பித்தலையும் எளிமைப்படுத்த அனிமேஷன் விடியோக்களை எடுத்து எடுத்துள்ளார் ஹேமலதா.

ஹேமலதாவை பிரதமர் பாராட்டிஉள்ளார். அவரது செயல்கள், பாராட்டுகள் அனைத்தும் இணைய தளத்தில் ஏற்றப்படவேண்டும் பிரதமர் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக அரசைப் பொருத்த மட்டில் முன்கூட்டியே ஹேமலதாவுக்கு விருது வழங்கிவிட்டது.

இவையெல்லாம் போதுமா?

அனிமேஷன் பாடங்கள் ஆங்கிலத்துக்கு வேண்டாமா? இந்திக்கு வேண்டாமா? ’இயற்பியலுக்கு, இரசாயனத்துக்கு, தாவரவியலுக்கு, விலங்கியலுக்கு வேண்டாமா?

அந்தந்தப் பாடத்தைக் கற்பிக்கும் யாராவது புண்ணியவான் அனிமேஷன் பாடங்களைத் தயாரிக்கட்டும் என்று காத்திருக்கலாமா?

மாவட்ட உதவி ஆட்சியர் முன்முயற்சியின் பேரில் ஹேமலதாவின் முயற்சி குறித்து ஆய்வு நடந்துள்ளது.  அந்த ஆய்வு முடிவு என்ன? அந்த முடிவு இந்த வழிமுறை சிறந்தது என்று உறுதி செய்தால் தமிழக அரசின் கல்வித்துறை அடுத்து என்ன செய்யப்போகிறது?

தமிழகத்தில் சிறந்த பாடநூல் நிறுவனம் உள்ளது .அதன் கவனத்துக்கு இந்த புதிய அனிமேஷன் பாட நூல் பற்றிய செய்தியை பள்ளிக் கல்வித்துறை அனுப்பியதா?

தமிழகத்தில் திரைப்பட கல்லூரி உள்ளது. அதன் போராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட யார் தூண்டுவது?

இந்தக் கேள்விகளுக்கு விடை காண்பதிலும் தமிழக கல்வி வளர்ச்சி இணைந்துள்ளது. உண்மைதானே!


ஆசிரியை ஹேமலதா தயாரித்த விரிவானம் அனிமேஷன் பாடத்தை கீழே இணைக்கப்பட்டுள்ளது.


 


கட்டுரையாளர்: குட்டிக் கண்ணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation