தைப்பூசத் திருவிழாவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து சமயத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை கூட்டம்

பதிவு செய்த நாள் : 29 டிசம்பர் 2020 15:34

சென்னை

திண்டுக்கல் மாவட்டம், பழநி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், 28.01.2021 அன்று  நடைபெறவுள்ள தைப்பூசத் திருவிழாவின்போது பின்பற்ற வேண்டிய முன்னேற்பாடுகள், கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில் அரசு தலைமைச் செயலாளர் க, சண்முகம் தலைமையில் இன்று (29.12.2020) நடைபெற்றது.

கொரோனா தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு, தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தைப்பூசத் திருவிழாவின்போது கோவில்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கருத்துகளைப் பெற சமயத் தலைவர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் ஆதினம்,  ஸ்ரீலஸ்ரீ மருதாச்சல அடிகள், நாகப்பட்டினம் மாவட்டம், ஸ்ரீதருமபுர ஆதினம், தென்மண்டல கட்டளை விசாரணை பிரதிநிதி திருஞான சம்பந்த தம்பிரான், பழநி, ஸ்ரீ ஞான தண்டாயுதபாணி பக்தர்கள் பேரவையின் மாநில அமைப்பாளர் செந்தில்குமார், பழநி, பாலதண்டாயுதபாணி பக்தர்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர், சேகர், பழநி, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் செயலாளர் சுவாமிநாதன் மற்றும் பழநி, மணிகண்ட ஐயப்பன் போஜனம் அமைப்பைச் சேர்ந்த, சுமதி ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தார்கள்.

இக்கூட்டத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர்,  உள், மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைத் துறை, கூடுதல் தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாகம் (ம) குடிநீர் வழங்கல் துறை, முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத் துறை,  முதன்மைச் செயலாளர், பொதுத் துறை,  காவல் துறை இயக்குநர் / காவல் படைத் தலைவர், காவல் துறைத் தலைவர், நுண்ணறிவுப் பிரிவு, ஆணையர், இந்து சமய மற்றும் அறநிலையங்கள் துறை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் இணை ஆணையர், ஆகியோர் கலந்து கொண்டனர்.