அண்ணாமலையார் மலையின் மீது கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது

பதிவு செய்த நாள் : 29 நவம்பர் 2020 17:54

திருவண்ணாமலை

கார்த்திகை மகா தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை உச்சியில் இன்று மாலை 6:00 மணிக்கு கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, 4 மணிக்கு கோவில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தை சிவாச்சாரியா்கள் கைகளில் சுமந்தபடி கோவில் 2, 3-ஆம் பிரகாரங்கள் மற்றும் உண்ணாமுலையம்மன் சன்னதியில் வலம் வந்தனர்.

2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் உச்சியில் இன்று மாலை 6 மணிக்கு கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது.

3,500 கிலோ நெய், 1000 மீட்டர் காடா துணி திரியைக் கொண்டு, அரோகரா, அண்ணாமலையார், நமசிவாய ஒலி முழங்க 6 அடி உயர கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

நவம்பர் 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய தீபத் திருவிழா இன்றைய மகா தீபத்துடன் நிறைவுபெற்றது.

இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், ஆட்சியர் சந்தீப் நந்தீரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உள்ளிட்டோர் தீபத் திருவிழாவில் கலந்துகொண்டர்.

மேலும்,

திருப்பரங்குன்றம், பழனி, திருச்சி மலைக்கோட்டையிலும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகையை முன்னிட்டு பொற்றாமரை குளம் உள்ளிட்ட கோயில் வளாகம் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு தடை உத்தரவால் திருவண்ணாமலையில் தீபத் திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தீபத் திருவிழாவில் இந்த வருடம் மட்டும் பக்தர்கள் குறைவாக இருந்தனர்.