தேங்கி கிடக்கும் படங்கள் இனி தியேட்டருக்கு வரும்! புதிய தலைவர் தகவல்

24 நவம்பர் 2020, 10:37 AM

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு புதிய தலைவராக முன்னாள் தலைவர் ராம நாராயணனின் மகன் முரளி ராமநாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் அளித்த முதல் பேட்டி வருமாறு:

பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் என்னை தலைவராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலுக்கு முன்புதான் அணிகள், தேர்தலுக்கு பிறகு எந்த அணியும் கிடையாது. எல்லோரும் ஒரே அணியாக இருந்து தயாரிப்பாளர்களின் நலனுக்காக உழைப்போம்.

கொரோனாகால ஊரடங்கால் திரையுலகம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து பின்தங்கியுள்ளது. அதிலிருந்து தயாரிப்பாளர்களை மீட்டெடுக்க முன்னுரிமை வழங்குவோம். குறுகிய கால திட்டங்கள், நீண்ட கால திட்டங்கள் என பிரித்து பணியாற்ற இருக்கிறோம். முதல் பணியாக தேங்கி கிடக்கும் படங்களை திரைக்கு கொண்டு வர பாடுபடுவோம். தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்த விபிஎப் கட்டணத்தை இனி தியேட்டர் உரிமையாளர்கள் தான் கட்ட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

சங்கத்தின் நிதி நிலமையை பொறுத்து நலத்திட்ட பணிகளை தொடங்குவோம். இப்போதுள்ள அரசு, இனி வரப்போகும் புதிய அரசு ஆகியவற்றுடன் நல்ல உறவை பேணி தயாரிப்பாளர்களுக்கு அரசு தரப்பில் இருந்து பெற்றுக் கொடுக்க கூடிய அனைத்தையும் பெற்றுத் தருவோம். என்றார்.