ரூ.309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம் - தொடங்கி வைத்தார் அமித் ஷா

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 17:25

சென்னை:

சென்னை- கலைவாணர் அரங்கில் இன்று நடைபெறும் அரசு விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். ரூ.309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார் அமித் ஷா.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக சென்னைக்கு வந்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

அமித் ஷாவை விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் பலர் வரவேற்றனர்.

பின்னர், சென்னை- கலைவாணர் அரங்கில் இன்று மாலை நடைபெறும் அரசு விழாவில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.

கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் அமித் ஷாவிற்கு முதலமைச்சர் பழனிசாமி நினைவு பரிசு வழங்கினார்.

உள்கட்டமைப்பு திட்டப் பணிகளைத் திறந்து வைப்பதற்கு முன்னதாக மறைந்த அதிமுக தலைவர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ. ஜெயலலிதா ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சர்  அமித் ஷா மலர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர்,

ரூ.309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

ரூ.900 கோடியில் வல்லூரில் இந்தியன் ஆயில் பெட்ரோலிய முனையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

ரூ.1400 கோடியில் முல்லைவாயிலில் மசகு எண்ணெய் உற்பத்தி ஆலைக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அடிக்கல் நாட்டினார்.

அமித்ஷா பேச்சு

தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

தமிழக கலாசாரம் பாரம்பரியம் மிகவும் தொன்மையானது.

உலகின் தொன்மையான தமிழில் பேச முடியாததற்கு வருத்தம் அளிக்கிறது. இதற்காக மன்னிப்பு கேட்கிறேன்.

மோடிஜி ஆட்சிக்கு வந்த பின்னர் மாநிலங்களிடையே போட்டியிடும் தன்மை அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு சிறந்த நிர்வாகத்திற்கான மாநிலங்களில் தமிழகத்திற்கு முதல் இடம் கிடைத்து உள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நாட்டில் பாதுகாப்பு தொழிற்சாலைகள் அமைவதற்கான திட்டங்களை இரண்டு மாநிலங்களில் செயல்படுத்தப்படும் என மோடி அரசு அறிவித்து உள்ளது. அவற்றில் ஒன்று தமிழகம்.

தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என தி.மு.க. தலைவர்கள் சில சமயங்களில் கூறியது பற்றி நான் கேள்விபட்டிருக்கிறேன். மத்தியில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தன.

மன்மோகன் சிங் அரசு, தமிழகத்திற்கு ரூ.16,155 கோடி ஒதுக்கீடு செய்தது.மோடி ஆட்சி ரூ.32, 850 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகத்திற்கு நாங்கள் செய்தவற்றை பட்டியலிட தயார்.

தமிழகத்திற்கு அதிக உதவி கிடைத்தது அந்த 10 ஆண்டுகளிலா அல்லது எங்களுடைய அரசாட்சியிலா என்பது பற்றி விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தமிழகத்திற்கு மத்திய அரசால் அளிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் நிதிகள் ஆகியவை உதவி என்ற அர்த்தத்தில் அல்ல. அவை தமிழகத்தின் உரிமைகள். தமிழகத்திற்கு அவை அளிக்கப்படாமல் இருந்தன. தற்பொழுது, தமிழகம் தனது உரிமைகளை பெற்றுள்ளது என்பது மோடிஜியால் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

திமுகவுக்கு அருகதை இல்லை

வாரிசு அரசியலை பா.ஜ., படிப்படியாக ஒழித்து வந்துள்ளது. தமிழகத்திலும் அதை ஒழிப்போம்.ஊழலை பற்றி பேச திமுகவுக்கு என்ன அருகதை உள்ளது.

2ஜி உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை செய்த திமுகவுக்கு ஊழல் பற்றி பேச என்ன அருகதை உள்ளது.?

குடும்ப அரசியல் நடத்திவரும் கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள்.

தமிழகத்திலும், குடும்ப அரசியலுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

இவ்வாறு அமித்ஷா பேசினார்.

இதனையடுத்து விழாவில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், “இனிவரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும்” என்று தெரிவித்தார். மேலும் 2021 சட்டமன்ற தேர்தலில் 3-வது முறையாக வெற்றிக்கனியை பறிப்போம் என்றும் அவர் கூறினார்.