பிரதமரின் துணிச்சலான சீர்திருத்தங்கள் இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும்: முகேஷ் நம்பிக்கை

பதிவு செய்த நாள் : 21 நவம்பர் 2020 16:50

காந்திநகர்

பிரதமர் நரேந்திர மோடியின் துணிச்சலான சீர்திருத்தங்கள் காரணமாக இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வழி அமைக்கப்படுகிறது என்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சேர்மன் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

பண்டிட் தீனதயாள் பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தின் மாணவர் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசும் பொழுது முகேஷ் அம்பானி இந்த கருத்தை தெரிவித்தார்.

உயிர்த்துடிப்புள்ள பிரதமர் மோடியின் தலைமை காரணமாக உலகம் இப்பொழுது நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு இந்தியாவில் என்ன நடக்கிறது என்று கூர்ந்து கவனித்து வருகிறது. பிரதமர் மோடியின் நம்பிக்கையும் உறுதியும் இந்திய நாடு முழுக்க அவர் விரும்பும் வகையில் மார்க் எடுக்க உற்சாகம் அளித்துள்ளது.

பிரதமர் மோடி அறிமுகம் செய்த துணிச்சலான சீர்திருத்தங்கள் காரணமாக இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு வழி அமைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட எல்லா நாடுகளிலும் இந்தியாவின் நீட்சி மிகவும் விரைவாகவும் துரிதமாகவும் அமைந்துள்ளது வரும் நாடுகளில் இன்னும் விரைவான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று அம்பானி கூறினார்.

பண்டிட் தீனதயாள் பெட்ரோலிய பல்கலைக்கழகம் என்பது குஜராத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்தபொழுது உருவாக்கப்பட்டதாகும்.

இன்று நம் முன் உள்ள முக்கியமான வினா நம்மால் நம்முடைய தேவைகளுக்கு ஏற்ற அளவில் எரிசக்தியை உருவாக்க முடியுமா என்பது தான்.

இவ்வாறு நம்முடைய தேவையான சக்தியை உருவாக்கும் பொழுது சுற்றுச்சூழலை மாசு படுத்தாமல் நம்மால் தேவையான எரிசக்தியை உருவாக்க முடியுமா?

இந்தப் பணியில் நாம் தோல்வி அடையாமல் நம்முடைய தேவைக்கான எரிசக்திகளை நாம் உற்பத்தி செய்ய வேண்டும்.

அத்துடன் எரி சக்தியை சேமிப்பது, எரிசக்தி செலவை மிச்சப்படுத்துவது, எரி சக்தியை பயன்படுத்தும் முறைகள் ஆகியவற்றின் புதிய கண்டுபிடிப்புகளை நாம் பயன்படுத்த வேண்டும்.

எரிசக்தி தொடர்பான இந்த தேவைகளுக்கும் நான்காவது தொழில் புரட்சிக்கும் இடையே நீக்கமற்ற இணைப்பு உள்ளது.

இந்த இணைப்பு தொடர்பான எல்லா விஷயங்களையும் நாம் நம் வசப்படுத்த வேண்டும் அப்பொழுது உலகிலுள்ள வளம் வாய்ந்த நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்கும். அப்பொழுது இந்தியாவின் 130 கோடி குடிமக்களுக்கும் வளத்தையும் நலத்தையும் நம்மால் உறுதி செய்ய முடியும்.

இவ்வாறு முகேஷ் அம்பானி பேசினார்.