வெனிசுலாவுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக அமெரிக்க தூதர் நியமனம்

பதிவு செய்த நாள் : 20 நவம்பர் 2020 21:47

வாஷிங்டன்,

வெனிசுலாவுக்கு கடந்த 2010ம் ஆண்டுக்கு பின் 10 முதல்முறையாக அமெரிக்க தூதர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கும், வெனிசூலாவுக்கும் இடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மோதல் போக்கு நிலவி வருகிறது. வெனிசூலாவில் மறைந்த ஹியூகோ சாவேஸ் அதிபராக இருந்தபோதே இது தொடங்கி விட்டது.

வெனிசூலாவின் தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோவை போதைப்பொருள் பயங்கரவாதி என்று டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டி வந்தது.

இந்த மோதல் காரணமாக கடந்த ஆண்டு இருநாடுகள் இடையே தூதரக உறவு முற்றிலும் துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் 10 ஆண்டுகளில் முதல் முறையாக வெனிசூலா நாட்டுக்கு ஜேம்ஸ் ஸ்டோரி என்பவரை தூதராக அமெரிக்க அரசு நியமனம் செய்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் நேற்று முன்தினம் நடந்த குரல் வாக்கெடுப்பில் ஜேம்ஸ் ஸ்டோரி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அமெரிக்காவில் ஜோ பைடன் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்க இருப்பது, அமெரிக்கா, வெனிசூலா இடையேயான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.