அமெரிக்காவுக்கு ராணுவ ரகசியங்களை விற்க முயன்ற ரஷ்யருக்கு 13 ஆண்டுகள் சிறை

பதிவு செய்த நாள் : 20 நவம்பர் 2020 21:19

மாஸ்கோ,

அமெரிக்க மத்திய உளவு அமைப்பான சி.ஐ.ஏவுக்கு (CIA) ராணுவ ரகசியங்களை விற்க முயன்ற ரஷ்ய நாட்டவரான யூரி அலெக்சாண்ட்ரோவிச் எஸ்செங்கோவுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு பிரிவில் கடந்த 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை பணியாற்றியவர் யூரி அலெக்சாண்ட்ரோவிச் எஸ்செங்கோ. நார்தர்ன் பிளீட் கப்பல்களின் ரேடியோ மின்னணு சாதனங்களை பராமரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிய யூரி, நார்தர்ன் பிளீட் பயன்படுத்தும் ஆயுதங்கள் தொடர்புடைய ரகசிய ஆவணங்களை நகல் எடுத்து அமெரிக்காவுக்கு சில காரணங்களுக்காக விற்க முயன்றுள்ளார்.

அவர் கடந்த 2019ம் ஆண்டில், அமெரிக்காவின் மத்திய உளவு அமைப்புடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்ட யூரி, கடந்த ஜூலை மாதம் சி.ஐ.ஏ.விடம் ராணுவ ரகசியங்களை அனுப்பி வைக்க முயற்சி செய்துள்ளார்.

இது குறித்து அறிந்து கொண்ட ரஷ்ய பாதுகாப்புத்துறை உக்ரைன் மற்றும் பெலாரஸ் நாடுகளின் எல்லையையொட்டிய ரஷ்யாவின் மத்திய பிரையான்ஸ்க் பகுதியில் யூரியை கைது செய்தது.

விசாரணையில் யூரி தன் குற்றத்தை ஒப்பு கொண்டதாக ரஷ்யாவின் அரசு பாதுகாப்பு சேவை அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 17ம் தேதி பிரையான்ஸ்க் மண்டல நீதிமன்றம், யூரி உயரிய தேசதுரோகம் செய்துள்ளார் என அறிவித்தது. அதைத் தொடர்ந்து யூரிக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து, அவரை உயர் பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.