கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 28

பதிவு செய்த நாள்

13
ஜூன் 2016
23:14

வெள்ளித்திரையில் நரிக்குறவர் விலாசங்கள்!

நரிக்குறவர், குருவிக்காரர் ஆகியோரை பழங்குடியினர் பட்டியலில்  சேர்க்கும் முடிவு, பிரதமர் மோடியின் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில்  மே  25, 2016 அன்று எடுக்கப்பட்டது. 

இது தொடர்பான நீண்டகால கோரிக்கையை ஜூலை 2012லும் ஆகஸ்டு 2013லும்  வலியுறுத்தியிருந்த முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசின் இந்த முடிவை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். குறத்தியாகவும் (‘ஒளி விளக்கு’), குறவள்ளியாகவும்  குறவள்ளிக்கு குறி சொல்லும் வஞ்சிக்குறத்தியாகவும் (‘கந்தன் கருணை’) வேடங்கள் ஏற்று நடித்தவர்  ஜெயலலிதா. பின்தங்கியிருக்கும் குறவர் சமூகம் தற்கால சூழலில்  அடைய வேண்டிய முன்னேற்றங்களைக் குறித்து அவர் அறியாமலா இருப்பார்?

தி.மு.க. பிரிவினை அடையாத காலத்தில், அந்தக் கட்சியின் ஓராண்டு ஆட்சியைப் பற்றி தன்னுடைய திரைப்படங்களின் வாயிலாக பிரசாரம் செய்தார் எம்.ஜி.ஆர். ‘ஒளி விளக்கு’ (1968) என்ற படத்தில் ஒரு நரிக்குறவனும் நரிக்குறத்தியும் (எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா) பாடும் பாடலின் வாயிலாக, புதிய ஆட்சியின் திட்டங்களையும் வெற்றிகளையும் முன் வைத்தார். நரிக்குறவர் ஜோடியை ஏன் தேர்ந்தெடுத்தார் எம்.ஜி.ஆர்.? சமுதாயத்தில் மிகவும் கீழ்மட்டத்தில் இருக்கும் நரிக்குறவரையே அரசின் திட்டங்கள் சென்றடைந்து, அவர்கள் ஆட்சியைப் புகழ்கிறார்கள் என்று சொன்னால், மற்றவர்களைப்பற்றிக் கேட்பானேன் என்ற எண்ணம்தான்! 

ஆனால் மிகச் சாமர்த்தியமாக, கட்சிப் பிரசாரத்திற்கு ஒரு காதல் பாடலின் இனிப்பைப் பூசிவிட்டார் எம்.ஜி.ஆர். அரசியல் விஷயம் என்றாலும், நரிக்குறவர் ஜோடியின் காதல் துள்ளலுடன் தொடங்கும் போது, நம்பகத்தன்மை கூடும் அல்லவா?

‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க, நல்ல பாட்டு படிக்கும் வானம்பாடிதானுங்க’ என்ற பல்லவியை மூன்று முறை முழங்கி, ‘டமுக்கடிப்பான் டியாலோ’வை பல முறை தட்டி, ஒரு சிருங்கார முன்னோட்டத்தை அமைக்கிறார்கள். பின்பு, சீர்த்திருத்த திருமணம் (சிக்கனமா கன்னாளம் முடிச்சிக்கிட்டோம், அதை சீர்த்திருத்த முறையிலே நடத்திக்கிட்டோம்), குடும்பக் கட்டுப்பாடு (பெத்தாலும் ஒண்ணு ரெண்டு பெத்து போடுவோம்), படி அரிசித் திட்டம் (படி அரிசி கிடைக்கிற காலத்திலே), குடிசை மாற்று வாரியம் (குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே) என்று  பிரசார பீரங்கி பலமாக முழங்குகிறது. ஆனால், வெறும் அரசியல் பாடலாக கருதமுடியாமல் போகிறது. ஏனென்றால், பாசி மணி, ஊசி விற்பது, ஊர்ஊராகச் செல்வது, நரிக்கொம்பு விற்பது, தெருவோரம் வாழ்வது முதலான நரிக்குறவர் வாழ்க்கைமுறைகளைப் பற்றிய தகவல்களும் பாடலில் ஊடாடி வருகின்றன. வாலி எழுதிய பாடலைப் பாடியவர்கள், டி. எம். சவுந்தரராஜனும் பி. சுசீலாவும். 

பாடல் வெற்றி அடைந்ததும் டி.எம். சவுந்தரராஜனைக் காண ஒரு ஸ்டூடியோவிற்கு இரண்டு விசேட நபர்கள் வந்திருந்தார்கள். இருவரும் நரிக்குறவர்கள். தங்கள்இனத்தைப் பற்றி அழகாக பாடியதற்காக டி.எம்.எஸ்ஸூக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்! ஜெயலலிதாவைப் பொறுத்த வரையில், குறவர் தொடர்பான வேடங்கள் அவரை ஒரு தனி மகிமையுடன் தொடர்ந்து வந்திருக்கின்றன. ‘தனிப்பிறவி’ படத்தில், ‘எதிர்பாராமல் நடந்ததடி’ என்ற  பாடலுக்கு அவர் அபிநயித்தார். இந்தப் பாடலில் தெய்வானையாகவும் குறவள்ளியாகவும் அவர் தோன்றினார். புராணங்கள் தன்னுடைய பகுத்தறிவுக் கொள்கைக்கு ஒவ்வாதவை என்று கூறிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., தேவரின் ‘தனிப்பிறவி’யில் முருகனாகத் தோன்றினார். குறவள்ளியையும் தெய்வானையையும் கரம் பிடித்தார்.

‘கந்தன் கருணை’ படத்தில் குறவள்ளியாக நடித்த ஜெயலலிதா, அந்தக் குறவள்ளிக்கு குறி சொல்லும் குறவஞ்சியாகவும் நடித்தார். ஒரே பிரேமில் இரு ஜெயலலிதாக்கள். ஒருவர்-– வள்ளி: இன்னொருவர்– குறவஞ்சி.இந்த வள்ளி – முருகன் தொடர்பு தமிழ் சினிமாவிற்கும் அதில் பங்கு கொண்டவர்களுக்கும்  அதிர்ஷ்ட கரமாகத்தான் திகழ்ந்திருக்கிறது. முதல் தமிழ் படம் என்று வழங்கப்படுகிற ‘காளிதாஸ்’ திரைப்படத்தில் நடித்த டி.பி. ராஜலட்சுமி, அதிலே ஒரு குறத்தி நடனம் ஆடத்தவறவில்லை. அது அவருக்கு வெற்றிகரமாகத்தான் அமைந்தது. ஆனால், அது குறித்து கல்கி கிருஷ்ணமூர்த்தி ஒரு விமர்சனத்தை முன் வைத்தார்.

‘‘அடுத்த முறை குறவன்-, குறத்தி நடனம் அமைக்க நேர்ந்தால், அசல் குறவன் ஒருவனையே சுலபமாக அமர்த்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.  பாவம், சோற்றுக்கில்லாத குறவர்களுக்கு ஒரு நாளும் அவ்வளவு பெரிய தொப்பை இராது. குறவர்கள் ஒல்லியாகவும் கட்டமைந்த சரீரம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்’’ என்றார் கல்கி. ஒரு பக்கம் வறுமை நிலை இருந்தாலும், வேட்டையில் ஈடுபடுவது, மருந்துகளைத் தேடி காடு, மலை திரிந்து செல்வது, எலி பிடிப்பது போன்ற வேலைகளில் ஈடுபடும் குறவர்களின் ஆரோக்கியம் குறித்து நல்ல அபிப்ராயமே இருந்து வந்திருக்கிறது. 

தமிழ் திரைப்படங்களில் குறவர் தொடர்பான காட்சிகளும், பாடல்களும் தொடர்ந்து வந்திருக்கின்றன. பின்னாள் பின்னணிப் பாடகர் சி. எஸ். ஜெயராமன், குழந்தை நடிகராக நடித்த ‘பக்த துருவன்’, 1934ல் வந்தது.  அதில், ‘இனிய கான சினிமா ராணி’ பி.எஸ். சிவபாக்கியம் குறத்தியாகவும், முதன்முதலில் ஒரே படத்தில் பல வேடங்களில் நடித்த பி.எஸ். சாமண்ணா அய்யர் குறவனாகவும் நடித்தார்கள். 

‘பச்சை சிகப்பு மிச்சம் கருப்புப் பாசியிருக்குது, பாசி கோர்க்கும் ஊசி இருக்குது, நரிக்கொம்பிருக்குது, பெரிய வரிப்புலி நகமிருக்குது, நம்ம புள்ளைக்கு வாங்கிப் போட்டா நல்லாருக்குமே,’ என்றும், ‘பச்சைக் குத்த ஆசை உமக்கில்லீங்களா’  என்றும் ‘குறத்தி’ சிவபாக்கியம் பாடினார். ‘பக்த துருவ’னில் வரும் குறவனுக்கு குறத்தியிடம் அடி வாங்கும் பழக்கம் இருக்கும் போலிருக்குது. ‘‘பொத்து பொத்து பொத்துன்னு அடிக்கிறே, பொம்பளை நீ என் கொமட்டிலே இடிக்கிறே,’’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். எவ்வளவு பெரிய இளவரசியாக இருந்தாலும், காதல் நிறைவேறுமா என்ற கவலை வரும் போது, குறத்தி வந்துதான் குறிசொல்லியாக வேண்டும். 

‘மதுரை வீர’னில் பாளையத்து அரசகுமாரியான பொம்மிக்கு (பானுமதி), வீரனுடன் நடந்த சேதியையும் நடக்கப்போகும் மீதியையும் குறத்திதான் குறி தவறாமல் கூறிச்செல்கிறாள் (குன்றுதோர் ஆடிடும் குமரவடிவேலன்).

‘மதுரை வீரன்’ தயாரிப்பாளர் லேனா செட்டியாருக்கு குறி கேட்கப் பிடிக்கும் போலும். அவர் எடுத்த ‘மாங்கல்ய பாக்யம்’ படத்திலும் குறத்தி குறி சொல்லுகிறாள். அவள் இப்படிப் பாடுகிறாள் - ‘அமைதியாக வாக்கினாலே சொல்லப் போறேன் சேதி, அத்தனையும் கேட்டவுடன் தீரும் மனோவியாதி’. நம் காலத்தில் மனநோய் மருத்துவர்களால் செய்யமுடிவதை அந்தக் காலத்து குறத்தி செய்து முடித்திருக்கிறாள்.

நரிக்குறவர்கள் நாடோடிகளாக வாழ்ந்ததற்கான பல வினோதமான காரணங்களை,  ‘நாடோடிக் கூட்டம் நாங்க’ என்ற பாடலில்  உடுமலை நாராயண கவி முன்வைத்தார் (படம், ‘அமர தீபம்’). ‘கஷ்டப் பட்டு வீட்டைக் கட்டி கண்டவனை குடிவச்சா, காலி பண்ணித் தரணுமேன்னு கச்சேரிக்குப் போனாலும், சட்டப்படி நமக்கதிலே சலுகை ஏதும் இல்லைன்னு பட்டணத்துக்காரன் சொன்னான்’ என்பது நரிக்குறவர் வீடு வாசல் இல்லாமல் இருந்ததற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது! கர்நாடக இசையில் கரை கடந்தவர் பாலமுரளிகிருஷ்ணா. ‘நவரத்தினம்’ படத்தில் அவர் எம்.ஜி.ஆருக்காக, ‘குருவிக்காரன் பெஞ்சாதி’ என்று குறவன் பாட்டுப் பாடினார். அவருடன் அந்தப் பாடலைப் பாடியவர் வாணி ஜெயராம். சங்கீத கலாநிதியும் கட்டுக்கடங்காத இசைக்கற்பனை கொண்டவருமான எம்.எல். வசந்தகுமாரி கூட குறத்திப் பாடல் பாடுவதிலிருந்து தப்பவில்லை. ‘ஐயா சாமி ஆவோஜி சாமி’ என்று ‘ஓர் இரவு’ படத்தில் பாடினார். பாடல் வினோதமான முறையிலே இறக்குமதி ஆகியிருந்தது. ‘சீகோ சீகோ’ என்று 1945ல் எட்மண்ட் ராஸ் என்ற பாடகர் இசைத்தார். அது ‘சமாதி’ என்ற இந்திப் படத்தில், ‘கோரே கோரே’ என்று 1950ல் வந்தவுடன் ‘ஓர் இரவில்’ 1951ல் பதிவாகிவிட்டது!  இப்படியெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறத்தி நடனமும் பாடலும் வந்தாலும், நமது காலத்து நரிக்குறவர்களைப் பற்றி ஒரு முழுப் படம் எடுத்த பெருமை கே.எஸ். கோபாலகிருஷ்ணனையே சாரும். அவர் எடுத்த ‘குறத்தி மகன்’ படத்தில்  கே.ஆர். விஜயாவும் ஜெமினி கணேசனும் நரிக்குறவர் ஜோடியாக நடித்தார்கள் (1972).  தன்னுடைய மகன் தற்காலக் கல்வி பயின்று முன்னேற வேண்டும் என்பதற்காக அவனை ஒரு குடும்பத்தாருக்கு தத்து கொடுக்கும் தியாகத்தாயாக கே. ஆர். விஜயா சிறப்பாக நடித்தார். கதைப்படி, பாம்புக்கடிக்கு இலக்கான ஒரு சிறுவனை நரிக்குறத்தியான கதாநாயகி, தான் கொண்டு வந்த ஒரு மருத்துவ வேரைப் பயன்படுத்தி குணப்படுத்துகிறாள். இன்று கூட, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த சிலர் மாற்று மருத்துவத்தைத் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். நரிக்குறவராக ஒரு படத்தில் வடிவேலு செய்த காமெடி, நரிக்குறவருக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. துப்பாக்கியைக் காட்டி பஸ்ஸை நிறுத்துவது, ஜவுளிக்கடையில் கூட்டத்தாருடன் கலாட்டா செய்வது, காக்காவை சுடுவது முதலியவை நரிக்குறவரை கேவலப்படுத்துவதாக அமைந்தன. இவையெல்லாம் நரிக்குறவர்களையும் குருவிக்காரர்க ளையும் குறித்து மற்றவர்கள் முன்வைத்தவை. நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த சரோஜா அம்மாள் என்பவர், மிஷ்கினின் ‘நந்தலாலா’ படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.  நரிக்குறவர் பாஷையில் அவர் எழுதிய ‘எலிலியே எலிலியே’ என்ற பாடல் இளையராஜா இசையில் சிறப்பாக அமைந்திருக்கிறது. இது ஒரு தொடக்கம்தான். இந்தியா மிகப்பெரிய வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கும் தறுவாயில், நரிக்குறவருக்கு திரை உலகிலும்     சிறந்த வருங்காலம் காத்திருக்கிறது.   

(தொடரும்)