ஒன்றரை மாதங்களுக்கு பின் குறைந்த கொரோனா பாதிப்பு : மத்திய சுகாதாரத்துறை தகவல்

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 20:43

புதுடில்லி,

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு பின் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது. மத்திய அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் இலக்குகளால் கொரோனா தடுப்பில் குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 74.32 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை 1.12 லட்சம் பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 65.24 லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். நேற்று மட்டும் 70816 பேர் குணமடைந்துள்ளனர்.

அதேசமயம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் பேர் குணமடைகின்றனர். இதனால் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி, நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 7,95,087 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்மூலம் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதிக்கு பின் முதல் முறையாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

மேலும் கடந்த செப்டம்பர் மாதம் இறுதி 2 வாரங்களை ஒப்பிடுகையில்  அக்டோபர் மாதம் முதல் பாதியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 சதவீதம் குறைந்துள்ளது. கொரோனா மரணங்கள் 19 சதவீதம் குறைந்துள்ளது.

மத்திய அரசின் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் இலக்குகளால் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியிருப்பதாகவும், அதிக அளவில் நோயாளிகள் குணமடைவதுடன், உயிரிழப்பு குறைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.