சபரிமலை அய்யப்பன் கோவிலில் புதிய மேல் சாந்திகள் தேர்வு

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 18:42

சபரிமலை அய்யப்பன் கோவிலில் நீண்ட நாட்களுக்கு பின் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கொரோனாவை தொடர்ந்து, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து கடந்த மார்ச் மாதம் முதல்,  சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்களுக்கு  தடை விதிக்கப்பட்டது. 

தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஐப்பசி முதல் நாளான நேற்று காலை 5 மணிக்கு கோவில்  நடை திறக்கப்பட்டது. தொடந்து நிர்மால்ய தரிசனம், 5.30 மணிக்கு கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து , இரு முடி கட்டுகளுடன் வந்த அய்யப்ப பக்தர்கள் ,   18-ம் படி வழியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாடு, ஆந்திரா, கர்னாடகாவில் இருந்து , முதல் நாளான நேற்று அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 7.30 மணிக்கு உஷ பூஜை நடந்தது. அதை தொடர்ந்து 8 மணிக்கு புதிய மேல் சாந்திகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல் தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி சுதீர் நம் பூதிரி முன்னிலையில்  சன்னிதானத்தில் நடைபெற்றது. அப்போது தேவஸ்தான தலைவர் வாசு. உறுப்பினர்கள் என். விஜயகுமார், ரவி , தேவஸ்தான கமிஷனர் பி.எஸ்.திருமேனி, சிறப்பு அதிகாரி மனோஜ் மற்றும் பக்தர்கள் உடன் இருந்தனர். இதை தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவில் மேல் சாந்தியை தேர்வு செய்வதற்கான குலுக்கல் நடவடிக்கைகள் தொடங்கியது.  ஏற்கனவே நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 9 பேரின் பெயர்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகள் வெள்ளி குடத்தில் போடப்பட்டது. மேலும் மற்றொரு வெள்ளி குடத்தில் மேல்சாந்தி என்று எழுதப்பட்ட ஒரு துண்டு சீட்டும் பெயர்கள் எழுதப்படாத 8 துண்டு சீட்டுகளும் போடப்பட்டது . தொடர்ந்து நடை பெற்ற பூஜைக்கு பின் குலுக்கல் மூலம் பந்தளம் கொட்டாரத்தில் இருந்து வந்த மன்னர் குடும்பத்தை சேர்ந்த சிறுவன் கவுசிக் வர்மா சபரிமலை மேல் சாந்தியாக திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூரை சேர்ந்த  வி.கே. ஜெயராஜ் போற்றியை தேர்வு செய்தார். 7- வது முறை எடுக்கப்பட்ட சீட்டில் ,  மேல்சாந்தி என்று எழுதப்பட்ட சீட்டும்   வி.கெ.ஜெயராஜ் போற்றி என்று எழுதப்பட்ட சீட்டும் எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து சபரி மலை மேல் சாந்தியாக வி.கெ. ஜெயராஜ் போற்றியின்    பெயரை சிறப்பு அதிகாரி மனோஜ் அதிகாரபூர்வமாக அறிவித்தார். தொடர்ந்து மாளிகப்புரம் மேல் சாந்தி தேர்வு , குலுக்கல் மூலம் அதே முறைப்படி நடந்தது. 5 வது முறையாக எடுக்கப்பட்ட சீட்டில் மேல்சாந்தி என்று எழுதப்பட்ட சீட்டும் எம்.என். ரெஜி குமார் என்று எழுதப்பட்ட சீட்டும் எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து எம்.என் . ரெஜி குமார் மாளிகப்புரம் மேல் சாந்தியாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவர், அங்கமாலியை சேர்ந்தவர். அவரை பந்தளம் மன்னர் குடும்பத்தை சேர்ந்த ரிஷிகேஷ் வர்மா தேர்வு செய்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரும் நவம்பர் 15-ந் தேதி தந்திரி முன்னிலையில் மூலமந்திரங்கள் சொல்லி பொறுப்பேற்று கொள்வார்கள். நவம்பர் 16 .ந் தேதி கார்த்திகை 1-ந் தேதி மண்டல பூஜையை முன்னிட்டு நடையை திறந்து வைத்து பூஜைகள், வழிபாடுகளை செய்வார்கள். இவர்களது பணிக் காலம் ஒரு வருடம் ஆகும். ஐப்பசி மாத பூஜை இம்மாதம் 21 - ந தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் . இந்நாட்களில் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றி தினசரி 250 பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.