108 ஆம்புலன்ஸ் அழைப்பதற்கு மொபைல் செயலி : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

பதிவு செய்த நாள் : 17 அக்டோபர் 2020 16:55

சென்னை,

தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்களை அழைக்கவும் ஆம்புலன்ஸ் எங்கு, எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை கண்காணிக்கவும் புதிய மொபைல் செயலி சில மாதங்களில், அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய செயலியை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த மொபைல் செயலி நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓலா (Ola), ஊபர் (Uber) செயலிகளை போல் இந்த மொபைல் செயலி மூலம் ஆம்புலன்ஸ்களை அழைக்கும் நபர்கள் அது எங்கு வருகிறது என்பதை நேரடியாகக் கண்காணிக்க முடியும். இதன் மூலம் மீண்டும் மீண்டும் அவசர உதவி எண்ணுக்கு அழைக்க வேண்டிய கட்டாயம் தவிர்க்கப்படும்.

ஆம்புலன்ஸ்கள் எங்கு வருகிறது என்பதை விசாரிக்க மக்கள் அடிக்கடி அவசர உதவி எண்ணுக்கு அழைப்பதால் புதிதாக ஆம்புலன்ஸ் உதவி கேட்டு அழைப்பவர்களுக்கு உரிய நேரத்தில் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் ஒரு லட்சம் அழைப்புகளில் 20,000 அழைப்புகள் மீண்டும் மீண்டும் அழைக்கப்பட்டவை. இதற்காக அடிக்கடி அவசர உதவி எண்ணை அழைக்கக்கூடாது என பொதுமக்களை கேட்டுக் கொள்ளவும் அதிகாரிகளால் முடியாது.

இந்த இக்கட்டான சூழ்நிலையை தவிர்க்கும் நடவடிக்கையாகவே இந்த மொபைல் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது.