இந்திய –சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் : எல்லைக்கு செல்லும் சீன ராணுவ வீரர்கள் கதறி அழும் வீடியோ வைரல்

பதிவு செய்த நாள் : 22 செப்டம்பர் 2020 20:57

தைபே,

இந்திய –சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வரும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) சில சீன ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்கு அனுப்பப்படுவதால் கதறி அழுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தான் நகைச்சுவை நடிகர் ஜைத் ஹமீத் ஒரு வீடியோவை பதிவேற்றியுள்ளார். அதில் லடாக் எல்லைக்கு அனுப்பப்படும்  சீன வீரர்கள் பேருந்தில் அழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

‘‘சீனாவின் ஒரு குழந்தை கொள்கை எங்கள் சீன சகோதரர்களின் மன உறுதியை கடுமையாக பாதிக்கிறது. பாகிஸ்தானியர்களான நாங்கள் சீனாவை ஆதரிக்கிறோம். தைரியமாக இருங்கள்" என அந்த வீடியோ குறித்து ஜைத் ஹமீத் விமர்சித்துள்ளார்.

பாகிஸ்தான் சீனாவின் நட்பு நாடு என்றாலும், இந்த வீடியோ காட்சி குறித்து ஹமீத் வேடிக்கையாக பேசியுள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் முதலில் புயாங் சிட்டி வீக்லி என்ற வார பத்திரிகையின் வீசாட் (Wechat) பக்கத்தில் வெளியானது. ஆனால் அது விரைவில் நீக்கப்பட்டது.

வீடியோவில் உள்ள வீரர்கள் அனைவரும் புதிதாக ராணுவத்தில் சேர்க்கப்பட்டவர்கள் என தெரிகிறது. மேலும் அவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் அவர்களில் ஐந்து பேர் திபெத்தில் பணியாற்ற முன்வந்ததாக தெரிகிறது. இது லடாக் பிராந்தியத்தின் எல்லையாக உள்ளது.

இந்த ஆண்டு ஜூன் மாதம் லடாக் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு ராணுவத்தினருக்கும் மோதல் நடந்த நிலையில் இந்த இளம் வீரர்கள் லடாக் எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஹெபாய் மாகாணத்தில் உள்ள ஒரு ராணுவ முகாமுக்குச் செல்ல அவர்கள் தயாரான நிலையில் புயாங் ரயில் நிலையத்தில் இந்த வீடியோ படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வீடியோவில், சீன ராணுவத்தின் "ராணுவத்தில் பசுமை மலர்கள்" என்ற பாடலை அந்த வீரர்கள் அழுது கொண்டே பாடுவதை கேட்க முடிகிறது.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சீன நெட்டிசன், இந்த ராணுவ வீரர்களிடம் அவர்கள் பேருந்தில் ஏறிய பின்னரே அவர்கள் எல்லைக்கு அனுப்பப்படும் தகவலை தெரிவித்திருப்பார்கள் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.