வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 16 செப்டம்பர் 2020 12:40

சென்னை

வேலூர் தொகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு அமைக்கப்படுகிறது. விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.

விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிட்ட அறிவிப்புக்கு, திமுக எம்.எல்.ஏ. துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார்.

காட்பாடி தொகுதியில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பதா, முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி கொண்டு வந்ததால், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை அரசு பிரிக்கிறதா? பல்கலை. பிரிக்கப்பட்டால் அதே பெயர் இருக்குமா? என சட்டமன்ற திமுக துணைத்தலைவர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார்.

விழுப்புரம் பிற்படுத்தப்பட்ட பகுதி என்பதைக் கருத்தில்கொண்டு விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழம் அமைக்கப்படவுள்ளது என துரைமுருகனுக்கு முதலமைச்சர் பழனிசாமி உடனுக்குடன் பதில்அளித்தார்.

விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிதாக அமைக்கப்படவுள்ள பல்கலைக்கழகம், வேலூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பாதிக்காது.

புதிய பல்கலைக்கழகத்தின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.


விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு புதிய பல்கலைக்கழகம் அமைப்பது குறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி  இன்று (16.9.2020) வெளியிட்டுள்ள அறிக்கை -

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

"எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்ற பாடல் வரிகளுக்கேற்ப அம்மா அவர்கள், தமிழ்நாட்டில் உயர்கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல அரசு கலைக் கல்லூரிகளையும், பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகளையும், பிற உயர்கல்வி நிறுவனங்களையும் துவக்கினார்கள்.

தமிழக அரசும், பல உயர்கல்வி நிறுவனங்களை தொடர்ந்து உருவாக்கியும், பல உயர் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்தியும் வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் மற்றும் மூலைமுடுக்கில் உள்ள ஏழை, எளிய மாணாக்கர்களின் உயர்கல்வி கனவு நனவானது.  இதன் காரணமாகத்தான் அகில இந்திய அளவில் 26.3 விழுக்காடு என இருக்கும் மாணவர் சேர்க்கை விகிதம், தமிழ்நாட்டில் மிக அதிகமாக, அதாவது 49 விழுக்காடு என்ற அளவில் உள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்களின் கோரிக்கை மற்றும் விழுப்புரம் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

இப்பல்கலைக்கழகம் நடப்பாண்டிலேயே செயல்பட துவங்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி விதிஎண் 110ன் கீழ் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.