குஜராத் ஜாம்நகரில் ஆயுர்வேத ஆய்வு நிறுவனம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது

பதிவு செய்த நாள் : 16 செப்டம்பர் 2020 12:20

புதுடெல்லி

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் ஆயுர்வேத ஆய்வு மற்றும் கல்வி நிறுவனம் அமைக்க வகை செய்யும் மசோதா இன்று மாநிலங்களவையில் நிறைவேறியது.

இதற்கான மசோதாவை மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தாக்கல் செய்து பேசினார்.

ஜாம் நகரிலுள்ள ஆயுர்வேத மருத்துவமனை மிகவும் பழமையானது. உலக சுகாதார நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு உள்ள ஒரு ஆயுர்வேத நிறுவனம் அதுதான். அதனால் அந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பல தகுதி வாய்ந்த நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஜாம் நகரில் உள்ள நிறுவனமும் ஒன்றாகும். மற்ற நிறுவனங்களும் தேசிய முக்கியத்துவம் பெற உரிய நேரத்தில் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.

போடோலேண்ட் மக்கள் முன்னணியை சேர்ந்த எம்பி பிஸ் வஜித் தாய்மாரி வடகிழக்கு மாநிலங்களில் ஒரு ஆயுர்வேத நிறுவனம் அமைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஏற்கனவே உள்ளே ஆயுர்வேத மருத்துவமனைகளில் ஒன்று அபிவிருத்தி செய்தால் செலவு குறைவாகும் என்று தேசியவாத காங்கிரஸ் எம்பி பாஸியாகான் குறிப்பிட்டார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியின் பி பினாய் விஸ்வம் ஆயுர் வேதத்தை வளர்த்து எடுப்பதற்கு உரிய சுற்றுச்சூழல் பராமரிக்கப்பட வேண்டும் சுற்றுச்சூழலை பராமரிக்காவிட்டால் ஆயுர்வேத அடிப்படை மருந்துகளை உருவாக்க முடியாது என்று கூறினார்.

ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த சிஎஸ்ஐ நாடாளுமன்ற உறுப்பினர் சுபாஷ் சந்திரா விவசாயிகள் மூலிகைகளை வளர்ப்பதற்கு உரிய நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தம்பித்துரை வலியுறுத்தல்

குஜராத் மாநிலத்தில் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆயுர்வேத நிறுவனம் உருவாக்கப்பட்டால் போதாது, ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய அளவு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை வலியுறுத்தினார்.

மத்திய அரசு சித்தா, யுனானி மற்றும் பிற இந்திய மருத்துவ முறைகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் தம்பித்துரை கேட்டுக்கொண்டார்.

கேரள மாநிலம் ஆயுர்வேதத்துக்கு பெயர்போனதாகும் எனவே ஆயுர்வேத நிறுவனம் ஒன்றை உருவாக்குவது என்ற பரிசீலனை வந்தாலே கேரள மாநிலத்தின் நினைவு வர வேண்டும். அது மத்திய அரசுக்கு ஏன் தோன்றாமல் போயிற்று என்று மார்க்சிஸ்ட் எம்பி ராஜேஷ் கேள்வி எழுப்பினார்.

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் எம்பி விஜய் சாய் ரெட்டி பேசும்பொழுது

ஆயுர்வேத நிறுவனத்தை அமைக்க வகை செய்யும் மசோதாவை ஆதரிப்பதாக குறிப்பிட்டார். கல்வித்துறை செய்து தங்களின் ஒரு பகுதியாக ஆயுர்வேத கல்வி நிறுவனம் அமைய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இந்நிறுவனத்தில் யோகா, நேச்சுரோபதி ஆகியவையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். போலி ஆயுர்வேத வைத்தியர்கள் தடைசெய்யப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆயுர்வேத கல்வி நிறுவனம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று விஜய் சாய் ரெட்டி குறிப்பிட்டார்.

சித்தமருத்துவம் புறக்கணிப்பு

குஜராத் மாநிலம் மத்திய அரசின் ஆதரவு பெற்ற மாநிலமாக உள்ளது. மீண்டும் ஆயுர்வேத நிறுவனம் அமைக்க குஜராத் மாநிலத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்துள்ளது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம். சண்முகம் தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தை தேர்ந்தெடுப்பதற்கான காரணம் என்ன என்று மத்திய அரசு விளக்கம் தர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வேறு சில மாநிலங்களில் ஆயுர்வேதத்திற்கு சிறப்பான வசதிகள் உள்ளன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு குஜராத் மாநிலத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

 தமிழகத்தில் தோன்றிய சித்த மருத்துவத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது .

அதனை ஊக்குவிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சண்முகம் குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் எம்பி சந்தோஷம் பேசும்போது,

பல மாநிலங்களில் ஆயுர்வேத மருத்துவமனைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன அவற்றை சீர் செய்து, அவற்றுக்கு நிதி வழங்கி மேம்படுத்துவதற்கு பதிலாக, குஜராத் மாநிலத்தில் மற்றொரு நிறுவனத்தை அமைப்பதன் நோக்கம் என்ன என்று தெரியாமல் காங்கிரஸ் எம்பி சந்தோஷம் கேள்வி எழுப்பினார்.

ஆயுர்வேத வைத்திய முறைகள் ஊக்குவித்து வலுப்படுத்தினால் சுகாதாரத் துறைக்கான அரசின் செலவு குறையும் என்று பாஜக எம்பி பிரசாந்த நந்தா கூறினார்.

ஜாம் நகரில் ஆயுர்வேத நிறுவனம் அமைப்பதற்கு வகை செய்யும் மசோதா மக்களவையில் வரவு செலவுத்திட்ட கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட்டுவிட்டது குறிப்பிடத்தகுந்தது.