இராமசாமி படையாட்சியாரின் 103ஆவது பிறந்தநாள் – அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

பதிவு செய்த நாள் : 16 செப்டம்பர் 2020 10:28

சென்னை

இராமசாமி படையாட்சியார் அவர்களின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், தமிழ்நாடு அமைச்சர் பெருமக்கள், சென்னை, கிண்டி ஹால்டா சந்திப்பில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு இன்று (16.9.2020) மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

தமிழக அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 16ஆம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இராமசாமி படையாட்சியார் அவர்களின் 103ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், சென்னை, கிண்டி ஹால்டா சந்திப்பில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு இன்று (16.9.2020) மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா. பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவர் பா.வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் பொ. சங்கர், செய்தி மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.