எஸ்சிஓ மாநாட்டிலிருந்து இந்திய பாதுகாப்பு ஆலோசகர் வெளிநடப்பு

பதிவு செய்த நாள் : 15 செப்டம்பர் 2020 21:17

மாஸ்கோ

சாங்காய் ஒத்துழைப்பு நிறுவன பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாட்டிலிருந்து இந்திய பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் தோவல் இன்று வெளிநடப்புச் செய்தார்.

காணொலி காட்சி மூலம் ரஷ்யா ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதிநிதி அங்கீகரிக்கப்படாத ஒரு வரைபடம் ஒன்றை பாகிஸ்தான் வரைபடம் என்று வெளியிட்டதை கண்டித்து அஜித் தோவல் வெளிநடப்புச் செய்தார்.

பாகிஸ்தான் பிரதிநிதியின் நடவடிக்கை அரசியல் அபத்தம் என்று அஜித் தோவல் வர்ணித்தார்.

பாகிஸ்தான் பிரதமர் பல தவறுகள் நிறைந்த வரைபடம் ஒன்றை காஷ்மீருக்கு சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் முதல்படி என்று வெளியிட்டார்.

அந்த வரைபடத்தை காணொளிக் காட்சி மூலம் வெளியிடக்கூடாது என்று மாநாட்டை ஏற்பாடு செய்த ரஷ்யா கூறிய போதிலும், பாகிஸ்தான் பிரதிநிதி பிடிவாதமாக அந்தத் தவறான மேப்பை வெளியிட்டார்.

பாகிஸ்தான் பிரதிநிதியின் நடவடிக்கையை ரஷ்ய பாதுகாப்பு துறை ஆலோசகர் நிக்கொலாய் பட்ருசேவ்குறை கூறியதோடு அஜித் தோவலின் நடவடிக்கையை பாராட்டினார்.

பாகிஸ்தான் பிரதிநிதி தனது பின்புலத்தில் தவறான வரைபடத்தை வெளியிட்ட போதிலும் காணொலிக் காட்சி மூலம் ஆன மாநாட்டில் முதலில் கலந்து கொண்டதற்காக அவர் அஜித் தோவலை பாராட்டினார்.