எம்பிக்கள் சம்பளத்தை பிடித்தம் செய்ய மசோதா மக்களவையில் நிறைவேறியது

பதிவு செய்த நாள் : 15 செப்டம்பர் 2020 19:08

புதுடெல்லி

மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்ய வகை செய்யும் மசோதா இன்று மக்களவையில் நிறைவேறியது.

இந்த மசோதா மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சம்பளப் பிடித்தம் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்வதாக ஒருமனதாக தெரிவித்தனர்.

அதேபோல நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சிக்காக நிதி நிதி ஒதுக்கும் திட்டத்தை கைவிடக்கூடாது என்று வலியுறுத்தினார்கள்.

ஆளும் பாரதிய ஜனதா அரசும் தொகுதி வளர்ச்சி நிதியில் கை வைக்க வேண்டாம் என்று உருக்கமாக வேண்டினார்.

மக்களவை காங்கிரஸ் தலைவர் ரஞ்சன் சவுத்ரி எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதி வளர்ச்சி நிதியை கிராமங்களுக்கு தான் செலவிடுகிறார்கள், இன்றைய சூழ்நிலையில் தொகுதி வளர்ச்சி நிதியை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மீண்டும் அமலுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மசோதா மீதான விவாதத்துக்கு பதிலளித்து நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசினார்.

நாட்டு மக்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதலில் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்வது நியாயமானதும் பொருத்தமானதும் ஆகும் அதனை மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர் அதற்காக நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜோஷி கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி வளர்ச்சி நிதியை மீண்டும் அமல்படுத்த வகை செய்ய வேண்டும் என்று எல்லாக் கட்சிகளின் உறுப்பினர்களும் இங்கு வலியுறுத்தினார்கள் கிராமப்புற வளர்ச்சிக்காக நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை அமல் செய்து வருகிறது மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு கல்வி திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது இருந்தாலும் உறுப்பினர்கள் அனைவரும் வலியுறுத்துகின்ற வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு மட்டுமே தொகுதி வளர்ச்சி நிதி ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என பிரகலாத் ஜோஷி குறிப்பிட்டார்.