அலெக்ஸ் நவல்னிக்கு நோவிசோக் விஷம் கொடுக்கப்பட்டது உண்மை : பிரான்ஸ், சுவீடன் உறுதி

பதிவு செய்த நாள் : 15 செப்டம்பர் 2020 16:59

பெர்லின்,

ரஷ்ய எதிர்கட்சி தலைவரான, அலெக்சி நவல்னிக்கு நோவிசோ என்ற கொடிய விஷம் கொடுக்கப்பட்டுள்ளது உண்மை என பிரான்ஸ் மற்றும் சுவீடன் உறுதி செய்துள்ளன.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அந்நாட்டு பிரதான எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸ் நவல்னி கடந்த மாதம், 20ம் தேதி, திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். கோமா நிலைக்கு சென்ற அவர் உடனடியாக, ஜெர்மனிக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார். அலெக்ஸ் நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் ஜெர்மன் மருத்துவர்கள் அவருக்கு, நோவிசோக் என்ற கொடிய விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்த விஷம் மனிதர்களின் நரம்பு மண்டலத்தை தாக்கி அவர்களை செயலிழக்க செய்யும்.

இந்நிலையில் ஜெர்மன் மருத்துவர்களின் தொடர் சிகிச்சை காரணமாக ஒரு வாரம் கோமா நிலையில் இருந்த அலெக்ஸ் நவல்னி தற்போது கோமாவில் இருந்து மீண்டுள்ளார்.அவரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அவரால் தற்போது சுவாசக்கருவிகள் உதவி இல்லாமல் தானாக சுவாசிக்க முடிகிறது. என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதேசமயம் இந்த நோவிசோக் விஷத்தால் நீண்ட கால பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளை சேர்ந்த மருத்துவர்களும், அலெக்ஸ் நவல்னியின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்து நோவிசோக் விஷம் கொடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர். ஆனால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்ன் மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லவ்ராவ் இருவரும் ஜெர்மனி, பிரான்ஸ், சூவீடனின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.