இந்திய எல்லைப் பிரச்சனை குறித்து மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் அறிக்கை

பதிவு செய்த நாள் : 15 செப்டம்பர் 2020 16:52

புதுடில்லி

இந்திய - சீன எல்லைப் பிரச்சினைக்கு அமைதியான வழியில் தீர்வுகாண இந்தியா உறுதி பூண்டுள்ளது என்று மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறும் பொழுது,

இந்தியாவின் எல்லையையும் இறையாண்மையையும் காக்க இந்திய ராணுவம் உறுதி பூண்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

கடந்த ஜூன் மாதம் 15 ஆம் தேதி கிழக்கு கடற்பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கின் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் சீன ராணுவத்துக்கு கடும் இழப்புக்களையும் இந்திய ராணுவம் ஏற்படுத்தி உள்ளது என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

சீன ராணுவத்தின் வன்முறையும் எல்லை நெடுகிலும் ராணுவத்தைக் கொண்டு வந்து குவித்து இருப்பதும் 1993 - 1996 ஆம் ஆண்டு ஒப்பந்தங்களுக்கு எதிரானது. நெடுங்காலமாக இருதரப்பினரும் அமல் செய்து வந்த எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை சீனா பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்த இருக்கிறது என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

மாஸ்கோவில் நடந்த பேச்சு வார்த்தைகளின் போது சீனாவின் வன்முறையும் சீனாவின் எல்லையைத் தாண்டிய ஆக்கிரமிப்புகளும் இரு தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இருந்த ஒப்பந்தங்களுக்கு விரோதமான செயல் என்று தெளிவாக குறிப்பிட்டோம் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

எல்லைப் பிரச்சினைக்கு அமைதியான வழியில் தீர்வுகாண இந்தியா இப்பொழுதும் தயாராகவும் உறுதியாகவும் உள்ளது என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் வெளிநடப்பு

பாதுகாப்பு அமைச்சர் இந்திய - சீன எல்லைப் பிரச்சனை பற்றி அறிக்கை வெளியிட்டது தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பலர் அவையில் பேச முயற்சித்தார். ஆனால் அவைத்தலைவர் ஓம் பிர்லா அவை விதிகளை சுட்டிக்காட்டி காங்கிரஸ் உறுப்பினர்களை பேச அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டார்.

மக்களவைத் தலைவரின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் மக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

பயப்பட வேண்டாம்

மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை வெளியிட்டது தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்வீட்டரில் வழக்கம்போல  பாஜக அரசை கடுமையாக சாடினார்.

ராகுல்காந்தியின் டுவிட்டர் செய்தி விவரம்:

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தி உள்ளது சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து இந்தியப் பிரதமர் மோடி நாட்டுக்கு தவறான தகவல்களை தந்து வந்திருக்கிறார்.

நமது நாடு எப்பொழுதும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வந்திருக்கிறது. எதிர்காலத்திலும் இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக செயல்படும். ஆனால் மோடி அவர்களே சீனாவுக்கு எதிரான கிளர்ச்சியில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள், எப்பொழுது இந்தியாவின் நிலத்தை சீனாவிடம் இருந்து மீட்கப் போகிறீர்களா, அவர்களைக் கண்டு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை இவ்வாறு ராகுல் காந்தி டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.