மொபைல் போனுக்கு நாம் அடிமை ?

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2020

கல்வி என்பது ரிஷி குரு பரம்பரையில் தொடங்கியது. முதலில் மாணவர்களுக்கு எந்த உபகரணமும் கிடையாது, பழைய சிஷ்யர்கள்தான் புத்தகம். அவர்களுக்கு கற்றுச்சொல்லிகள் என்று பெயர். அவர்களுக்கு ஏடு எழுத்தாணி வந்தது. ஏடும் எழுத்தாணியும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப எத்தனை மாற்றங்களைப பெற்றுள்ளன. ஏடு எழுத்தாணி பாட்டன் என்றால் அவர்களின் பேரக்குழந்தையாக மொபைல் போன்கள் வந்துள்ளன.

ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றம் என்பது காலத்தின் கட்டாயம். ஒரு மரத்தின் கீழ் சேர்ந்து படித்ததிலிருந்து ஆரம்பித்து இப்பொழுது ஒரு அறையில் தனியாக படிக்கும் நிலையில் தள்ளப்பட்டுள்ளோம். கோவிட் என்ற இந்த இக்கட்டான காலகட்டம் நம்மை ஒவ்வொன்றாக கற்பித்தும், பழக்கப்படுத்தியும் வருகிறது. பழக்கமில்லாத வழிமுறைகளையும், புதுமையான பல விஷயங்களையும் நமக்கு பரிசளித்து வருகிறது. அதில் ஒன்றுதான் தொழில்நுட்பத்தின் ஆடம்பரம் என்பது. அது நமது வாழ்க்கையில் தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. இப்பொழுது கல்வி என்பது அன்லைன் கல்வியாக உருமாறி உள்ளது. இந்த ஆன் லைன் கல்வியில் மிக முக்கியமானதாக மொபைல்கள் உள்ளன.  கல்வி மொபைல் போன்களின் திரை அளவுக்கு சுருங்கி நிற்கும்பொழுது நாம் நினைத்துப் பார்க்கின்ற, கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன.


தொழில்நுட்பம் என்பது இரண்டு பக்கமும் கூர்மையான வாள் போன்றதாகும். எவ்வளவு நன்றாக பயன்படுத்துகிறோமோ, அவ்வளவு எதிர்மறையாகவும் பயன்படுத்தலாம். இப்பொழுது அல்லது இனி வரும் காலங்களில் தொழில்நுட்பம் அறவே இல்லாமல் வாழ்வது என்பது இயலாத காரியங்களில் ஒன்றாகும். இன்று மனிதனின் எல்லாத் துறைகளிலும் தொழில்நுட்பம் நுழைந்து ஒரு முக்கிய அங்கமாகிவிட்டது. இந்த தொழில்நுட்பம்தான் நமது குழந்தைகளின் கல்வியை தடையில்லாமல் கொண்டு செல்வதற்கு இந்த கொரோனா காலகட்டத்தில் பயன்பட்டு வருகிறது.

சில காலத்திற்கு முன்பு வரை குழந்தைகள மொபைல் போனை பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்திருந்த நாம்தான் இப்பொழுது  மொபைல் போனை குழந்தைகள் கையில் கொடுக்க வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறோம்.  இதனால் நமக்கு ஒரே சமயத்தில் ஒரு புறம் சமாதானமும், மற்றொரு பயமும் ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பத்தைப் பற்றி நல்ல அறிவுள்ள பெற்றோர்களின் குழந்தைகளும், இதைப் பற்றி நன்கு அறியாத பெற்றோர்களின் குழந்தைகளும் சில நேரங்களில் ஒன்றுபோல் மொபைல் போனின் பிரச்சனைகளில் சிக்குவதுண்டு.

பெற்றோர்களுக்குத் தெரியாத பல விஷயங்களுக்கு குழந்தைகள் மொபைல் போனில் பயன்படுத்துகிறார்கள். குழந்தகள் கையில் மொபைல்கள் மந்திரக் கோலாகி விட்டன.

கல்விக்கு என்று நாம் கொடுக்கின்ற இந்த சுதந்திரம் பல நேரங்களில் குழந்தைகளை மொபைல் போனுக்கு அடிமையாக்கி விடுகிறது.


என் குழந்தைக்கு மொபைல் போனில் எல்லா விஷயங்களும் தெரியும் என்று பெருமையாக சொல்லும் பெற்றோர்கள் பின்பு அவருடைய குழந்தைகள் மொபைல் போனுக்கு அடிமையாகிவிட்டார்கள் என்று புலம்புகிறார்கள்.  மொபைல் போனுக்கு அடிமையான குழந்தைகளின் அறிகுறிகளை பின்வருமாறு கண்டறியலாம்.

1.   உறக்கம் இல்லாமல் இரவு நேரங்களில் அதிகமாகப் பயன்படுத்துதல்

2.   பள்ளிக்கூட கடமைகள் அல்லது வீட்டுக் கடமைகளை நிறைவேற்றாதிருத்தல்

3.   மொபைல் போனை அடிக்கடி இவர்கள் எடுத்துப் பார்த்தல்

4.   இவர்களுக்கு எட்டுந்தூரத்தில் போனை வைத்துக் கொண்டு அடிக்கடி எடுத்துப் பார்த்தல்

5.   அதிக மணிநேரங்கள் போனில் நேரம் செலவளித்தல்

6.   சாப்பிடும் பொழுதும் பிறருடன் பேசும் பொழுதும் போனில் கவனம் செலுத்துவது

7.   ஞாபக மறதி, கவனக்குறைவு போன்றவை ஏற்படுதல்

8.   அவர்களிடமிருந்து மொபைல் போனை வாங்கும்போது அவர்களுக்கு அதிக கோபம், வருத்தம் ஏற்படுதல்

9.   சமூகத்தினருடன் பழகுதல் குறைவு

மேற்கூறிய நடைமுறைகளை உங்கள் குழந்தைகளிடத்தில் கண்டால் அவர்கள் மொபைல் போனுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள் என சந்தேகப்படலாம்.

அத்தகைய  குழந்தைகளை திடீரென்று ஒருநாளில் அதிலிருந்து விடுபட வைப்பது என்பது இயலாத விஷயமாகும். நாம், அவர்களுடன் சேர்ந்து பழக வேண்டும்.அவர்களை நன்கு புரிந்துகொண்டு படிப்படியாக அதிலிருந்து அவர்களை வெளியில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.

இந்த பாதையில் நாம் செய்ய வேண்டியசெயலகள் என்ன? அதற்கான வழிகாட்டு நெறிகள் என்ன?

1. ஒரு டைரியில் அவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் படிப்பிற்கும், எவ்வளவு நேரம் இதர விஷயங்களுக்கும் மொபைல் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பற்றி ஒரு பட்டியல் தயாரிக்க வேண்டும். கறாராக தயாரிக்கும் பட்டியல் துல்லியமாகவும்  இருக்க வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகள் உங்கள் செயல் திட்டத்தை நம்புவார்கள்.

மொபைல் போனுடன் அவர்கள் செலவிடும் நேரம் அதிகம் என்பது உறுதியானால் நீங்கள் அடுத்த நகர்வுக்கு போகலாம்


2.  அவர்களுக்கு பிடித்த மற்ற பொழுதுபோக்கு விஷயங்களான அலங்கார செடி வளர்த்தல், செல்லப் பிராணிகள் வளர்த்தல், வீட்டு விவசாயங்கள், சமையல் போன்றவற்றை செய்யும்படி அவர்களைத் தூண்டலாம், ஊக்கப்படுத்தலாம். அதற்கு அவர்களுக்கு நாம் உதவலாம்.

3. குடும்பத்தினருடன் நேரம் செலவளிக்க ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கலாம். அந்த நேரத்தில் மொபைல் போனை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

4.  சாப்பாட்டு அறை மற்றும் தூங்கும் அறையில் மொபைல் போன் பயன்படுத்துவதை தடை செய்யலாம்.

5. நடனம், பாட்டு, கராத்தே, கருவி இசை போன்றவைகளை அவர்களின் திறமைக்கு ஏற்ப கற்பிக்கலாம்.

6. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மொபைல் போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

7.  மொபைல் போனை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதின்  தீமைகளை அவர்களிடம் அன்புடன் எடுத்துக் கூறி புரியவைக்கலாம்.

8. எல்லா கட்டுப்பாடுகளையும் ஒரே நேரத்தில் கொண்டுவரக்கூடாது. அவற்றை படிப்படியாக கொண்டு வரலாம்.

மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் முழுமனதோடு  செய்ய வேண்டும். அப்படியும் பலன் கிடைக்கவில்லை என்றால் மன நல நிபுணர்களை கலந்தாலோசிக்கலாம்.


R.K. நிஷா 

உளவியல் ஆலோசகர், 

கைரோஸ் மைண்ட் கேர், நாகர்கோவில்

செல்: 9567625706


கட்டுரையாளர்: R.K. நிஷா, உளவியல் ஆலோசகர் - நாகர்கோவில்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation