ஒணம் பண்டிகை: தமிழ்நாடு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

பதிவு செய்த நாள் : 30 ஆகஸ்ட் 2020 10:08

சென்னை,

இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும், மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் என்று  ஓணம் பண்டிகையையொட்டி மலையாள மொழி பேசும் மக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர்  கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

ஆளுநர் வாழ்த்து

மலையாள மக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  ஓணம் திருநாள், மக்கள் வாழ்வில் அமைதியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும் என பன்வாரிலால் வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.


 அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட வாழ்த்து செய்தி

திருவோணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எங்களது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறோம். மகாபலி மன்னனின் அகந்தையை அழித்திட, திருமால் வாமனன் அவதாரம் பூண்டு மூன்றடி மண் கேட்க, முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து பூமிக்குள் புதைக்கும் முன்பு, அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று, ஆண்டுதோறும் தனது நாட்டு மக்களைக் காண வரம் கொடுத்தார். அதன்படி மக்களைக் காண வரும் மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று ஓணம் திருநாள் கொண்டாடப்படுகிறது.

10 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, மலையாள மொழி பேசும் மக்கள் தங்கள் வீடுகளின் முன்புறம் அரிசி மாவினால் கோலமிட்டு, அதனை வண்ணப் பூக்கள் கொண்டு அலங்கரித்து, நடுவே குத்துவிளக்கேற்றி, புத்தாடை உடுத்தி, அறுசுவை உணவு உண்டு, ஆடல், பாடல், விளையாட்டுகளுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர். திருவோணத் திருநாளான இந்த நன்னாளில், இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும், மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும்  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது வழியில் எங்களது நெஞ்சம் நிறைந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறோம். 

இவ்வாறு,  வாழத்து செய்தியில் தெரிவித்துள்ளனர்,