பழவகைகளுடன் 7 அடி உயர விவசாய விநாயகர்- விவசாயம் செழிக்க சென்னையில் பக்தர்கள் பிரார்த்தனை

பதிவு செய்த நாள் : 23 ஆகஸ்ட் 2020 14:56

சென்னை,

சென்னையில்  7 அடி உயரத்தில்  பழ வகைகளுடன் விவசாயம் செழிக்க வேண்டி விவசாய விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை - திருவொற்றியூர் வடிவும்மன் கோவில் எதிரே உள்ள அப்பர்சாமி தெருவில் 7 அடி உயர விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சங்கு வாத்திய கருவிகளை  இசைக்க  பயிற்சியளிக்கும் வடிவுடை மாணிக்கம் சங்கநாத அறக்கட்டளை இந்த பழ விநாயகர் சிலையை அமைத்துள்ளது, 

இந்த விநாயகர் சிலை முழுக்க முழுக்க பழங்களால் ஆனது. இதற்காக 140  சாத்துக்குடிகள், 21 கிலோ நெல்லிக்கனிகள், 5 கிலோ தக்காளி மற்றும் ஆப்பிள் பழங்களோடு இந்த விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாய விநாயகர் என்று பெயரிடப்பட்டுள்ளது,

மழை பொழியவும் வேளாண் செழிக்கவும் இந்த விநாயகர் சிலை  வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது

3 நாட்கள் இந்த விவசாய விநாயகர் வழிபாடு நடைபெறும் மூன்றாம் நாளன்று கடலில் கரைப்பதற்கு பதிலாக விநாயகரின் அங்கங்களில் உள்ள பழங்கள் பக்தர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விநாயகர் வழிபாட்டில் 108 சங்குகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.