விநாயகரை போன்று நம் புத்தி கூர்மையாகவும், சமநிலையாகவும் செயல்பட வேண்டும் – சத்குருவின் வாழ்த்து செய்தி

பதிவு செய்த நாள் : 21 ஆகஸ்ட் 2020 15:19

சென்னை

விநாயகரை போன்று நம் புத்தி கூர்மையாகவும், சமநிலையாகவும் இருந்தால் நம் வாழ்க்கையில் எத்தகைய தடையும் இல்லாமல் ஆனந்தமாகவும், அமைதியாகவும் வாழ முடியும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

தமிழ் மக்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். விநாயகர் அல்லது கணபதிக்கு இருந்த சிறிய தலையை எடுத்துவிட்டு பெரிய தலையை வைத்துவிட்டார்கள். பெரிய தலை என்னும்போது அதிக அறிவு, அதிக புத்திசாலித்தனம் என்றே பொருள். எனவே விநாயகரின் புத்தி கூர்மையாகவும் அதேசமயம், சமநிலையாகவும் இருக்கிறது.

எப்போது உங்கள் புத்தி கூர்மையாகவும், சமநிலையாகவும் இருக்கிறதோ அப்போது உங்களுக்கு தடை என்பதே கிடையாது. அதனால், தான் விநாயகரை ‘விக்னேஷ்வரன்’(தடைகளை களைபவர்) எனவும் அழைக்கிறோம்.

அதே போல் நீங்கள் அனைவரும் உங்கள் புத்தியை கூர்மையாகவும், சமநிலையாகவும் வைத்து கொள்ள வேண்டும். இந்த தன்மையை நமக்குள் வளர்த்து கொள்வதற்காகத் தான் நாம் விநாயகரை வணங்குகிறோம். இத்தகைய புத்தி நமக்கு இருந்தால் நாம் எதை சாதிக்க விரும்பினாலும், அதை ஆனந்தமாகவும், அமைதியாகவும் சாதிக்க முடியும்.

குறிப்பாக, தற்போது கொரோனா வைரஸ் உலகில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இலட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மக்கள் பலவித துயரங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நேரத்தில் நம் புத்தி கூர்மையாவும், சமநிலையாகவும் இருந்தால் நம் வாழ்வில் எந்த சவால் வந்தாலும் அதை ஒரு வாய்ப்பாக மாற்றி ஒரு நல்ல வாழ்க்கை வாழ முடியும். இதற்காக, நம் தேசம் மற்றும் உலகத்தில் உள்ள அனைவருக்கும் நன்மை பயக்கும் விதமாக நம் புத்தி செயல்பட வேண்டும் என்ற உறுதியை அனைவரும் விநாயகர் சதுர்த்தி நாளில் எடுக்க வேண்டும்.

இவ்வாறு, விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில் சத்குரு தெரிவித்துள்ளார்.