விழித்துக் கொண்டது காவல்துறை ! - சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2020

”குற்றம் சாட்டப்பட்டவர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு சட்டப்படி  7 ஆண்டுகளுக்கு குறைவான  தண்டனை வழங்கவே சட்டத்தில் இடம் உள்ளது என்றால் குற்றம் சாட்டப்பட்டவரைக கைது செய்ய வேண்டியதில்லை.”

’’அதையும் மீறி குற்றம் சட்டப்பட்ட  எதிரியைக் கைது செய்யத்தான்  வேண்டும் என்றால் அவருக்கு விசாரணை அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.’

இதுதான் தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி சமீபத்தில் தந்துள்ள விளக்கத்தின் சுருக்கம்.

 இது காலந்தாழ்ந்து வந்த உத்தரவு என்றாலும் இது வரவேற்கப்பட  வேண்டிய ஒரு ஆணை.

 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரிகளான தந்தை ஜெயராஜ்,மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணமடைந்த சம்பவம் தமிழகத்தில் பெரும்   பரபரப்பை ஏற்படுத்தியது. சிபிஐ விசாரணைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

சம்மந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் கைது  செய்யப்பட்டனர். இந்தப் பின்னணியில்தான்  டிஜிபியின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அர்னேஷ்குமார் என்பவரைக் கைது  செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. இதன்படி 7 ஆண்டுகள் அல்லது   அதற்குக் குறைவான சிறை தண்டனைக்குரிய குற்றங்கள் ஒருவர் மீது கூறப்பட்டிருக்கும் பொழுது ஏற்புடைய காரணம் இல்லாமல் கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது. புலன் விசாரணை அதிகாரி முதலில் குற்றத்தின் தன்மையை ஆய்வு செய்து, கைது செய்யவேண்டியதன் அவசியத்தை எழுத்து மூலம் விளக்கம் அளித்து பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யாத புலன் விசாரணை அதிகாரி மீது துறை ரீதியான வழக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும்.

கைது செய்தவரை நீதித் துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தும்போது, எதிரி நீதிமன்றக் காவலுக்கு ஏன் உட்படுத்தப்படுகிறார் என்பதற்காக விளக்கத்தை வழங்கவேண்டும்.

கைது செய்தது ஏன் என்ற காரணத்தை எழுத்து மூலம் பதிவு செய்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

 கைது செய்யத் தேவையில்லை என்கிறபோது அதற்குரிய அறிவுரைகளையும், நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.

இந்த அறிவுரைகளைக் கடைப்பிடிக்கத் தவறும் பட்சத்தில் புலன் விசாரணை அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதை உணரவேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டும் ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக டிஜிபி இப்போது இந்த உத்தரவை போட்டிருப்பது கூட சிபிஐ விசாரணை வந்த பிறகுதான்.

குற்றம் ஆவணக் காப்பகக் குறிப்புக்களின்படி 2001 முதல் 2018 ஆண்டு  வரை இந்தியாவில் 1,700 பேர் இது போன்ற காவல் நிலைய இறப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள். இதில் இதுவரையில் 26 காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

 2017 ம் ஆண்டு மட்டும் தமிழக காவல் நிலைய மரணங்கள் அதாவது  custodial deaths  76. இதில் நீதிமன்ற காவலில் இருக்கும்போது இறந்தவர்கள் 65. காவல்துறை காவலில் இறந்தவர்களின் எண்ணிக்கை என்பது 11. அந்த வருடம் காவல் நிலைய மரணங்களில் தமிழக தான் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

பெரும்பாலான காவல் நிலைய மரணங்கள் பதிவு செய்யப்படுவதேயில்லை.  காரணம் மரணம் அடைபவர்கள் படிக்காத பாமர ஏழை மக்கள். அவர்கள் காவல் துறையில் கெடுபிடிகளுக்குப் பயந்து புகார் கொடுக்கப்படுவதேயில்லை.

 காவல்துறை சீர்திருத்தங்கள் இந்தியாவில் பெரும்பாலும் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகே நடந்திருக்கிறது. காவல்துறை மக்களின் நண்பன் என்பதையெல்லாம் மக்களும், காவல்துறையினரும் மறந்தே போனார்கள்.

 அதே சமயம் காவல்துறையினருக்கு இருக்கும் நடைமுறைச் சிக்கல்களையும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். இந்த கொரானா தொற்று ஊரடங்கு காலங்களில் இந்தியாவில் பல மாநிலங்களில் தனி நபர்களாலும், பொதுமக்களாலும் காவல்துறையினர் தாக்கப்படுவதையும் நாம் ஊடகங்களில் பார்க்கிறோம்.

 தமிழ்நாட்டில் ஊரடங்கு காலத்தில் பல இளைஞர்களைத் தடுத்தபோது , இளைஞர்கள் பயமின்றி சீருடை அணிந்த காவலர்களை தாக்கியதை நாம் பார்க்கிறோம்.

 தொழில்நுட்ப வளர்ச்சி என்பது பல புதுவித குற்றங்களை கொண்டு வந்திருக்கிறது.

 1971ம் ஆண்டிலிருந்து இந்தியாவில்  காவல்துறை சீர்திருத்தத்திற்காக இதுவரையில் 6 கமிட்டிகள் போடப்பட்டுள்ளன.

 1. கோர் கமிட்டி 2. தேசிய போலீஸ் கமிஷன் 3. போலீஸ் சீர்திருத்ததிற்கான ரிபெய்ரோ கமிட்டி 4. இதே போலீஸ் சீர்திருத்ததிற்காக பத்மநாபய்யா கமிட்டி 5.அமைச்சர்கள் குழு கொண்ட தேசிய பாதுகாப்பு கமிட்டி 6. குற்றவியல்  நீதித்துறை அமைப்பிற்காக மாலிமத் கமிட்டி. ஆனால் எல்லா கமிட்டி சிபாரிசுகளும் ஆவணக் காப்பகங்களில் தூங்கிக்கொண்டிருக்கிறது.

 2018ம் ஆண்டு மட்டும் தமிழ்நாட்டில் 12 காவல்நிலைய மரணங்கள் பதிவு செய்யப்பட்டன. இதை விசாரிக்க இதுவரையில் ஒய்வுபெற்ற நீதிமன்ற நீதிபதிகள் தலைமையிலான 12 கமிட்டிகள் போடப்பட்டன. ஆனால் அந்த கமிட்டிகளில் நிலை என்ன ? காரணம் இந்த 12 வழக்குகளில் எந்த அதிகாரி மீது இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை.

அதற்கு இன்னொரு அடிப்படைக் காரணமும் உண்டு. மற்ற துறை சார்ந்த பிரச்சினைகள் போலீஸ் பிரச்சினைகள் ஆன பிறகு மற்ற அமைச்சர்கள், அதிகாரிகள் இயல்பாக வாய் திறப்பதில்லை. வாய் திறந்தால் அது முதலவருக்கு எதிரான புகாராகி விடுமோ என்ற அச்சமும் கவலையும் வாய் மூடச் செய்து விடுகிறது. தமிழகத்தில் 1967க்குப்பிறகு உள்துறை என்பது இன்றுவரை முதலமைச்சரின் பொறுப்பிலேயே இருக்கிறது.

1957ம் வருடம் காமராஜர் அரசில் மாநில முதல்வர் காமராஜர்,  திட்டம், மகளிர் மேம்பாடு இரண்டு துறைகளை மட்டுமே தன்வசம் வைத்திருந்தார். உள்துறை அமைச்சர் அன்று போலீஸ் அமைச்சர் என்றழைக்கப்பட்டார். அந்தத் துறைக்கு அமைச்சராக இருந்தவர்தான் எளிமைக்கும், பின்பு ஏழ்மைக்கும் ஆட்பட்ட பி. கக்கன்.மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.

1962ம் வருடம் மீண்டும் காமராஜர் முதல்வரானார். அப்போது அவரிடம் இருந்தது உள்துறை மட்டுமே. அவருடைய முழுக்கவனமும் அந்த இலாக்கா மீது மட்டுமே இருந்தது. அதற்குக் காரணம் இருந்தது.  அப்போது திமுக கூடுதல் சட்டமன்ற இடங்களைப் பிடித்திருந்தது. ஏராளமான பிரிவினை கோஷங்கள். உள்துறை அமைச்சரிடம் முக்கியமான உளவுத்துறை தகவல்கள் வரும். அவை மிகவும் ரகசியமானவை. அந்த ரகசியங்களை யாரும் அரசியல் ரீதியாக பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காக மட்டுமே அந்தத்துறையை தன் கையில் வைத்திருந்தார் காமராஜர் .

 1967 அண்ணா முதலமைச்சரானார். அவருடைய முதல் அமைச்சரவையில் முதல்வரின் அண்ணாவிடம் நிதி, வருவாய்த்துறை, வீட்டுவசதிதுறை, உள்துறை என்று பலதுறைகளை அவர் வசம் இருந்தது.

` நான் ஆட்சிக்கு வருவதற்கு முன் என்னை கைது செய்த சென்னை கமிஷனர் எஃப்.வி. அருள், இப்போது நான் முதல்வரானதும் எனக்கு சல்யூட் அடிக்கும்போது, மனதிற்குள் சற்று கர்வமாகவே உணர்கிறேன்’ என்றார் அண்ணா.

 மேலும் ஆட்சிக்கு வந்த அரசியல் தலைவர்களின் சொந்த வாழ்க்கையில் பல ரகசியங்கள் உண்டு. உள்துறை அவர்களிடம் இருந்தால், முதல்வர் ரகசியங்கள் கூட உள்துறை அமைச்சர் என்கிற மூன்றாம் நபருக்குத் தெரியவரும். அந்த அமைச்சரோடு,முதல்வருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டால் பல ரகசியங்கள் அம்பலமாகும் என்பதற்காகவே உள்துறையை இன்றுவரையில் முதல்வர்களே வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 இந்தியாவில் பல மாநிலங்களில் உள்துறைக்கென்று தனியாக ஒரு அமைச்சர் இருப்பார். ஆனால் தமிழ்நாட்டில் உள்துறை என்றால் அது முதல்வரின் இலாகா என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.

 காவல்துறைக்கென்று தனி அமைச்சர், தனி இலாக்கா இருந்தால் அவர் அந்த காவல்துறையின் மீது முழுக் கவனம் செலுத்த முடியும். எப்படியோ  உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகாவது தமிழக காவல்துறை விழித்திக்கொண்டது வரவேற்கத்தக்கது.


கட்டுரையாளர்: சுதாங்கன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation