தரமான கல்வி கிடைக்க புதிய கல்வி கொள்கை உதவும்: பிரதமர் உறுதி

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2020 18:59

புதுதில்லி

நாட்டின் இளைஞர்களுக்கு தரமான கல்வி கிடைக்க புதிய கல்வி கொள்கை உதவும் என்று  பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலியில் உரையாற்றினார்.

புதிய கல்வி கொள்கை மூலம் மாணவர்களின் பாடச்சுமை குறையும் என்றும் தாய்மொழி கல்வியை புதிய கல்வி கொள்கை ஊக்குவிக்கிறது  என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

21-ம் நூற்றாண்டு  அறிவு யுகமாக அமையும். அதற்கேற்ப இந்தியாவை மாற்ற புதிய கல்வி கொள்கை உதவும். இந்தியாவில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முன்னேற்றம் கொண்டுவர வேண்டும் என்பதே இதன் நோக்கம். நம் குறைபாடுகளை நாம் முதலில் உணர வேண்டும். புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். 

வேலை தேடுபவர்களை உருவாக்குவது அல்ல புதிய கல்வி கொள்கை, வேலை கொடுப்பவர்களை உருவாக்குவது தான்.

கற்றல், ஆய்வு, கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, மனப்பாடக் கல்வியிலிருந்து சிந்தனை ஆற்றலை வளர்க்கும் முறைக்கு மாறுவதற்கு புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்

மாணவர்களின் பாடச்சுமை இதன் மூலம் குறையும். இது தனிமனித திட்டமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான திட்டம்.

இதுநாள் வரையில் கல்வி முறையில் இருந்த சிக்கல்கள் இக்கொள்கை மூலம் தீர்க்கப்படும்.

இளைய சமுதாயத்தினரின் எதிர்பார்ப்புகளையும், 21ஆம் நூற்றாண்டில் அவர்களின் வளர்ச்சியையும் புதிய கல்விக் கொள்கை உறுதி செய்துள்ளது.

ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் புதிய கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறு, புதிய கல்வி கொள்கை குறித்து பிரதமர் மோடி உரையில் தெரிவித்துள்ளார்.