ஜெர்மனிக்கு சீனா கண்டனம்

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2020 17:48

பெர்லின்

ஹாங்காங் உடன் ஜெர்மன் அரசு செய்துகொண்ட குற்றவாளிகள் நாடுகடத்தல் ஒப்பந்தத்தை ஜெர்மன் அரசு ரத்து செய்திருப்பதை சீனா கடுமையாக கண்டித்தது.

பெர்லின் நகரில் உள்ள சீன தூதரகம் ஜெர்மன் அரசை கடுமையாக குறை கூறியது.

ஜெர்மன் அரசு ஹாங்காங் அரசுடன் முன்னர் செய்துகொண்ட குற்றவாளிகள் நாடுகடத்தல் ஒப்பந்தத்தை கடந்த வெள்ளிக்கிழமையன்று ரத்து செய்வதாக அறிவித்தது.

சீன அரசு ஹாங்காங் நகருக்கு நிறைவேற்றிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஜெர்மன் அரசு குறை கூறியது. இந்த சட்டம் ஹாங்காங் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக ஜெர்மன் அரசு குற்றம் சாட்டியது.

ஹாங்காங் நகர சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான ஜனநாயக ஆதரவு கட்சிகளின் கை ஓங்கி விடக்கூடாது என்பதற்காக தேர்தலை ஓராண்டு காலத்துக்கு அதிபர் லாம் ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளார்.

இது ஹாங்காங் மக்களின் பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும் நடவடிக்கை ஆகும். அதனால் இவற்றுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் குற்றவாளிகள் நாடுகடத்தல் ஒப்பந்தத்தை ஜெர்மன் அரசு உடனே ரத்து செய்தது என ஜெர்மன் அரசின் வெளியுறவு அமைச்சர் ஹெய்கோ மாஸ் அறிவித்தார்.

ஜெர்மன் அமைச்சரின் அறிவிப்பு சீனாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் நடவடிக்கையாகும் என பெர்லினில் உள்ள சீன தூதரகம் கண்டனம் தெரிவித்தது. ஹாங்காங் சீனாவின் ஒரு பகுதியாகும் அதன் விவகாரங்களில் தலையிடுவது சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது ஆகும் என சீன தூதரகம் குறிப்பிட்டது.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக 6 பேருடைய பெயர்களை ஹாங்காங் அரசு வெளியிட்டுள்ளது அந்த ஆறு பேரில் ஒருவர் வோங். அவர் தற்பொழுது ஜெர்மனியில் வசித்து வருகிறார். அவரை தேடப்படும் குற்றவாளியாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.