முப்தி கைது நீடிப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தும் செயல்: ப. சிதம்பரம் கண்டனம்

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2020 17:07

புதுடெல்லி

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் முப்தி முகமது சயீத் சிறை தண்டனையை மீண்டும் 3 மாதங்கள் நீடிக்க அரசு உத்தரவிட்டு இருப்பது சட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் நடவடிக்கையாகும் என்று மத்திய அரசின் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறினார்.

முப்தி முகமது சயீத் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்வதற்கு அரசு நிபந்தனை ஒன்றை அறிவித்ததாக கூறப்படுகிறது.  அதன்படி அரசியல் சட்ட விதி 370 ரத்து செய்ததை கண்டித்து பேச மாட்டேன் என்று முப்தி முகமது சயீத் வாக்குறுதி தந்தால் அவரை விடுதலை செய்வதாக அரசு உறுதியளித்தது. இந்த நிபந்தனையை ஏற்க மறுத்து விட்டார். அதனால் அவரை பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொடர்ந்து காவலில் வைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவரது காவல் ஆகஸ்ட் 5ம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் அவருக்கு மீண்டும் 3 மாத சிறைக்காவல் அறிவிக்கப்பட்டுள்ளது என ப. சிதம்பரம் தெரிவித்தார்.

61 வயதாகும் முப்தி முகமது சயீத் எப்பொழுதும் அரசு காவல் வீரர்களுடன் இருக்கிறார். இந்நிலையில் அவர் எப்படி பொது பாதுகாப்புக்கு எதிராக செயல்பட முடியும் அரசு பொது பாதுகாப்புச் சட்ட அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முப்தியை சிறையில் அடைத்து வைத்துள்ளது என ப. சிதம்பரம் கூறினார்.

அரசியல் சட்ட விதி 370 க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் நான் மனுதாரர்கள் சார்பாக ஆஜராகி வாதாடி வருகிறேன். அரசியல் சட்ட விதி 370 க்கு எதிராக நான் நீதிமன்றத்தில் பேசும் காரணத்தினால் பொது பாதுகாப்புக்கு எதிராக செயல்படுகின்றவனாக ஆக முடியுமா என்று சிதம்பரம் கேள்வி எழுப்பினார்.

முப்தி முகமது சயீத்தை விடுதலை செய்யக் கோரி மாபெரும் இயக்கம் நடத்தப்பட வேண்டும் எனவும் ப.. சிதம்பரம் தெரிவித்தார்.