ஐம்பது வயதைத் தாண்டிய கேரள போலீஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஸ்டேஷன் டூட்டி

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2020 14:34

திருவனந்தபுரம்

கேரளா மாநிலம் கோட்டயம் நகர மருத்துவமனையில் 54 வயதான அஜிதன் என்ற போலீஸ் அதிகாரி கரோனா வைரஸ் தொற்றால் சனிக்கிழமை காலை காலமானார்.

அதைத்தொடர்ந்து, 50 வயதைத் தாண்டிய கேரளா மாநில போலீஸ் அதிகாரிகள் அனைவரும் ஸ்டேஷன் டூட்டி பார்க்க வேண்டும் என்று கேரள மாநில காவல் துறைத் தலைவர் லோக்நாத் பெஹ்ரா உத்தரவிட்டுள்ளார்.

50 வயதுக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு கரோனா வைரஸ் தொற்று வாய்ப்புகளைக் குறைப்பதற்காக ஸ்டேஷன் டூட்டி வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

தொற்று நோய் அல்லாத பிற உடற்கோளாறுகளை உடைய காவல்துறை அதிகாரிகள் ஸ்டேஷன் டூட்டிக்கும் வரவேண்டியதில்லை, அவர்கள் வீட்டிலிருந்தபடி பணியாற்றலாம் என்று லோக்நாத் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் 95 போலீஸ் அதிகாரிகள் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் பலர் தடுப்பு குவாரனடைனில் தங்கள் வீடுகளில் உள்ளனர்.

கேரளத்தில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம், போராட்டம் அறிவிக்கும் பொழுது அவற்றைத் தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் கரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகிறார்கள் எனக் கூறப்படுகிறது.