புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த இயலாத நிலையில் கேந்திரிய வித்யாலயா, சிபிஎஸ்இ பள்ளிகள்

பதிவு செய்த நாள் : 01 ஆகஸ்ட் 2020 12:58

புதுடெல்லி

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆரம்பப் பள்ளிகளில் தாய்மொழி அல்லது பிராந்திய மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும். சாத்தியமானால் இந்த ஏற்பாடு எட்டாவது வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கும் நீடிக்கப்பட வேண்டும். தாய்மொழி அல்லது பிராந்திய மொழியில் பள்ளிக்கல்வி அமைவது நல்லது என்று புதிய கல்விக் கொள்கை கூறியுள்ளது.

இந்த பரிந்துரையை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், சிபிஎஸ்இ பள்ளிகளும் அமல்படுத்த இயலாத நிலையில் உள்ளன.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், சிபிஎஸ்இ பள்ளிகளும் அரசு ஊழியர் குழந்தைகள் படிப்பதற்காக என்று உருவாக்கப்பட்டவை. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அரசு ஊழியர்கள் பணிஇடம் மாற்றப்படும் பொழுது அவர்களது கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த பள்ளிகள் அமைக்கப்பட்டன. அரசு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படும் பொழுது அவர்களது குழந்தைகள் முன்னுரிமை அடிப்படையில் இப்பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும் என்று பள்ளிகளுக்கான மாணவர் சேர்க்கை விதிகள் கூறுகின்றன.

அரசு ஊழியர்கள் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். எனவே அவர்களது தாய் மொழியும் வேறுபடுகின்றது. ஒரு வகுப்பிலேயே பத்துக்கும் மேற்பட்ட தாய்மொழி நிலைகொண்ட மாணவர்கள் தற்பொழுது உள்ளனர். இந்த பத்து தாய் மொழிகளிலும் வகுப்புகளை நடத்துவது என்பது சாத்தியமில்லை என்று கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், சிபிஎஸ்இ பள்ளிகளும் கருத்து கூறுகின்றனர்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைக் கவனித்து வரும் ஒரு மூத்த அதிகாரி தாய்மொழியில் கல்வி என்ற திட்டம் பற்றி கூறும்பொழுது

இலட்சிய அடிப்படையில் இது மிகச்சிறந்த பரிந்துரையாகும். கல்வித்துறையை பொறுத்தமட்டில் கூட இது மிக மிகச் சரியானது. ஆனால் துரதிஸ்டவசமாக நம்முடைய நாட்டில் இதனை அமுல்படுத்த முடியாது என்று கூறினார்.

நமது பள்ளி குழந்தைகளுக்கு சமஸ்கிருதம் கற்றுத் தருவது என்ற கருத்து மிகவும் அற்புதமானது. சமஸ்கிருதம் எல்லா குழந்தைகளுக்கும் தாய் மொழி ஆகும் தகுதி உடையது.

கேந்திரிய வித்யாலயா கடந்த 55 ஆண்டுகளாக மும்மொழிக் கொள்கையை பின்பற்றி வருகிறது. முதல் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரைக்கும் ஆங்கிலம் அல்லது இந்தி கட்டாயமாக கற்பிக்கப்படுகிறது.

ஆறாவது வகுப்பில் இருந்து எட்டாவது வகுப்பு வரை சமஸ்கிரதம் கற்றுத்தரப்படுகிறது.

 9, 10ம் வகுப்புகளில் இந்தி அல்லது சமஸ்கிருதத்தை மாணவர்கள் தேர்வு அடிப்படையில் கற்றுக்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட பிராந்திய மொழியை கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்கள் எண்ணிக்கை 15க்கு மேல் இருக்கும் பட்சத்தில் அங்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுகிறார் அதற்குக் குறைவாக மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு என தனியாக ஆசிரியர்கள் நியமிக்க இயலாது.

கேரளத்தில் தேர்வு மொழியாக மலையாளமும், ஆந்திரத்தில் தேர்வு மொழியாக தெலுங்கும் உள்ளது. 6ம் வகுப்புக்கு மேல் வெளிநாட்டு மொழியாகிய ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகியவை நான்காவது விருப்பத்தேர்வு மொழியாக கற்பிக்கப்படுகிறது என்று கேந்திரிய வித்யாலயா பள்ளி அதிகாரி கூறினார்.

தாய்மொழியில் கல்வி என்ற திட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளிடம் விடப்பட்டுள்ளது. இந்த விதியை அமல் செய்வது என்பது மாநில அரசுகளின் பொறுப்பாகும்.

உயிர்த்துடிப்புள்ள இந்தியாவை உருவாக்குவது எல்லோரும் பங்கு கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிசாங் தெரிவித்தார்.