பிஎஸ் 4 ரக வாகனங்களை மறு உத்தரவு வரும் வரை பதிவு செய்யக் கூடாது: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

பதிவு செய்த நாள் : 31 ஜூலை 2020 17:48

புதுடெல்லி

கரோனா ஊரடங்கின் போது  விற்ற பிஎஸ் 4 தர நிலை உள்ள வாகனங்களை பதிவு செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் கண்டிப்பாக வெள்ளியன்று உத்தரவு வெளியிட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்சநீதிமன்றம் வாகன விற்பனை தொடர்பாக உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அந்த உத்தரவின்படி  2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதியிலிருந்து இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பிஎஸ் 4 (BS4) தரநிலை உள்ள மோட்டார் வாகனங்கள் விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஏப்ரல் முதல் தேதிக்கு முன்பாக மார்ச் மாதம் கடைசி வாரத்தில் கரோனா பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பொது ஊரடங்கு காரணமாக பிஎஸ் 4 தரநிலை உள்ள மோட்டார் வாகனங்கள் மார்ச் மாதம் கடைசி வாரத்தில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஏப்ரல் மாதம் அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மார்ச் 27ம் தேதியில் இருந்து 10 நாட்களுக்கு

பிஎஸ் 4 தரநிலை உள்ள மோட்டார் வாகனங்கள் விற்பனை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

தேசிய தலைநகர் பகுதிகளில் மட்டும் இந்த விற்பனை அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.

இந்தப் பின்னணியில் ஜூலை மாதம் முதல் வாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மோட்டார் வாகன விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் விற்பனையாளர்கள் வசம் தேங்கிக் கிடக்கிற பிஎஸ் 4 தரநிலை உள்ள மோட்டார் வாகனங்களை மீண்டும் உற்பத்தியாளர்களுக்கு அனுப்ப அனுமதி தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது

இந்த கோரிக்கையை  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு இன்று பரிசீலித்தது.

மோட்டர் விற்பனையாளர்கள் வசம் விற்பனையாகாமல் தேங்கிக் கிடக்கிற மோட்டார் வாகனங்களை உற்பத்தியாளர்களுக்கு மீண்டும் அனுப்பி வைப்பதற்கு உச்ச நீதிமன்றத்திடம் ஏன் அனுமதி பெற வேண்டும்?

மோட்டார் வாகனங்கள், பணியாளர்கள் நேரடியாக விற்பனையாளர்களுக்கு அவற்றை அனுப்பலாமே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.

சில நாடுகளில் என்னும் பிஎஸ் 4 தரநிலை உள்ள மோட்டார் வாகனங்கள் விற்பனை செய்யலாம். அந்த நாடுகளுக்கு மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனங்களை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது என்பதை மோட்டார் வாகன விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் மார்ச் மாதம் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்ட காலத்தில் விற்பனையான பிஎஸ் 4 தரநிலை உள்ள மோட்டார் வாகனங்கள் தொடர்பான விற்பனை  நம்பர்களைத் தெரிவித்தனர்.

மார்ச் கடைசி வாரத்தில் மிக அதிக அளவு விற்பனை நடந்திருப்பதாக விற்பனையாளர்களை புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இந்த விற்பனை தொடர்பான விபரங்களை உச்சநீதிமன்றத்திற்கு விற்பனையாளர்கள் சங்கத்தின் சார்பில் தெரிவிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 13-ம் தேதி எடுத்துக்கொள்ளப்படும்.

 அடுத்த உத்தரவு வெளியாகும் வரை மார்ச் மாத இறுதி வாரத்தில் விற்பனை செய்யப்பட்ட பிஎஸ் 4 ரக  மோட்டார் வாகனங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிவு செய்யக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.