ஒரு வார்டுக்கு ஒரு கணபதி: கணபதி மண்டல்களுக்கு மும்பை மாநகராட்சி கடிதம்

பதிவு செய்த நாள் : 21 ஜூலை 2020 16:13

மும்பை

கொரோனா வைரஸ் தொற்று இன்னும் கட்டுக்கடங்காமல் பரவி வரும் சூழலில் வரும் 22ம் தேதி துவங்கும் கணபதி சதுர்த்தி விழாவை முன்னிட்டு ஒரு வார்டுக்கு ஒரு கணபதி என்ற அளவில் எண்ணிக்கையை குறைத்து மக்கள் கூட்டத்தையும் குறைக்க உதவும்படி மும்பை மாநகரில் இயங்கும் கணபதி மண்டல்களுக்கு மாநகராட்சி உதவி கமிஷனர் விஸ்வாஸ் போத்தி கடிதம் எழுதியுள்ளார்.

ஆகஸ்ட் 22ஆம் தேதி கணபதி சதுர்த்தி விழா தொடங்குகிறது, 10 நாட்கள் கணபதி சதுர்த்தி விழா நடைபெறும்.

மும்பை நகரில் மட்டும் கொரோனா வைரஸ் காரணமாக 5,500 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே கணபதி சதுர்த்தி விழாவை குறித்து பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க உதவும் படி கணபதி மண்டல்களுக்கு மும்பை மாநகராட்சி கடிதம் எழுதியுள்ளது.

மும்பை நகரத்தில் கே மேற்கு வார்டில் மட்டும் 150க்கு மேற்பட்ட கணபதி மண்டல்கள் உள்ளன. கரோனா வைரஸ் பாதித்தவர் எண்ணிக்கை 1813 ஆக உள்ளது. 258 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்தப் பகுதியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. மேலும் உயிர் இழப்பை தவிர்க்க இப்பகுதிக்கு ஒரே ஒரு இடத்தில் கணபதி விழா கொண்டாடும்படி மும்பை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. ஒரு வார்டுக்கு ஒரு கணபதி என்ற அளவில் எண்ணிக்கையை குறைக்கும் படியும் மும்பை மாநகராட்சி உதவி ஆணையர் கூறியுள்ளார்.

கணபதி சிலைகளை தண்ணீரில் கரைப்பதற்காக மாநகராட்சி நிர்வாகமே அவைகளை விழா பந்தலில் இருந்தே பெற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளது எனவும் மாநகராட்சி உதவி கமிஷனர் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.