பக்தர்கள் இல்லாமல் இணையதள நேரடி ஒளிபரப்புடன் கோயில் திருவிழாக்களுக்கு அனுமதி

பதிவு செய்த நாள் : 20 ஜூலை 2020 18:10

சென்னை 

கோயில்களில் திருவிழாக்களை பக்தர்கள் இல்லாமல், இணையதள நேரடி ஒளி பரப்புடன் நடத்தலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது.

கோயில்களில் திருவிழாக்கள் நடத்துதல் தொடர்பாக வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலைச் சார்ந்த மற்றும் பட்டியலைச் சாராத கோயில்களில் அன்றாடம் நடைபெறும் பூஜைகள் மட்டுமல்லாது, விழாக்கள் நடைபெறுவது இன்றியமையாத ஒன்றாக திகழ்ந்து வருகிறது..

கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக கோயில்கள் அரசின் விதிமுறைப்படி பூஜைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுவருகிறது. இதனை தொடர்ந்து தற்போது வழக்கமாக நடைபெறும் விழாக்கள் குறித்து தலைமையிடத்தின் அனுமதி கோரியும், உற்சவ திருவிழா நிகழ்வுகளை காணொளி பதிவுகளை வலைஒளி சேனல் மூலம் பதிவேற்றம் செய்ய அனுமதி வேண்டி முன்மொழிவுகள் சார்நிலை அலுவலர்களிடமிருந்து வந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

கோயில்களில் பழக்க வழக்கப்படி நடைபெறும், திருவிழாக்களுக்கு தலைமையிடத்தின் அனுமதி பெற வேண்டியதில்லை. விழாக்கள் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள்படி மாறுதல் ஏதுமின்றி திருவிழாக்கள்  கோயில்களில் சொற்ப அளவிலான பணியாளர்களைக் கொண்டு, முகக்கசவம் அணிந்தும் 6 அடி சமூக  இடைவெளி கடைப்பிடித்தும் நடைபெறவேண்டும்.

இந்த விழாக்களில் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்துகொள்ள கண்டிப்பாக அனுமதி இல்லை. கொரோனா நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டி, நெறிமுறைகளையும், கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும்.

திருவிழாக்கள்  தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி ஏதும் பெற வேண்டியிருப்பின், அவ்வனுமதியையும் பெற்று திருவிழாக்கள் நடத்தப்படவேண்டும்.

இவ்விழாக்களை பக்தர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து காணும் வகையில் வலைதள நேரடி ஒளிப்பரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு, இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.