கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஒபெக் நாடுகள் முடிவு

பதிவு செய்த நாள் : 16 ஜூலை 2020 14:59

நியூயார்க்

கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் முடிவு செய்துள்ளன. புதன்கிழமையன்று காணொலிக் காட்சி மூலம் நடந்த ஆலோசனையில் இந்த முடிவு எட்டப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் கரோனா வைரஸ் தொற்று காரணமாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. விமானங்கள், ரயில்கள், பேருந்துகள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. அதன் காரணமாக பெட்ரோல், டீசல் தேவை கடுமையாக குறைந்து விட்டது. இந்நிலையில் கச்சா எண்ணையின் விலை குறைந்தது. அதன் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைப்பது என்று எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் முடிவு செய்தனர்.

இதன்படி ஆகஸ்ட் மாதத்தில் தினசரி உற்பத்தியை 20 லட்சம் பேரல் அளவுக்கு கொண்டுவருவது என்றும் முடிவு செய்யப்பட்டது. தினசரி உற்பத்தியை 77 இலட்சம் பீப்பாய் அளவுக்கு குறைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

இப்பொழுது போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டுள்ளன. அதனால் பெட்ரோல், டீசல் தேவை அதிகரித்துள்ளது. அதனால் உற்பத்தியை அதிகரிப்பது என்று எண்ணெய் ஏற்றுமதி செய்யும் 13 நாடுகள் புதன்கிழமை என்று முடிவு செய்தன.

ஜூன், ஜூலை மாதங்களில் இடம்பெற்ற உற்பத்தியைவிட ஆகஸ்ட் மாதம் கூடுதலாக உற்பத்தி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டால் உடனடியாக உற்பத்தியை பழைய நிலைமைக்கு குறைக்க வேண்டும் என்றும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் தீர்மானித்தன.

இந்த முடிவுகள் தொடர்பாக எல்லா நாடுகளும் விழிப்புடன் இருந்து செயலாற்ற வேண்டும் என்றும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு இடையே உடன்பாடு எட்டப்பட்டது.