50 சீன கம்பெனிகளின் முதலீட்டு திட்டம் குறித்து அரசு பரிசீலனை

பதிவு செய்த நாள் : 07 ஜூலை 2020 14:32

புதுடெல்லி

 இந்தியதொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலை மற்றும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலையை பயன்படுத்தி இந்தியத் தொழில் நிறுவனங்களை இந்தியாவின் அண்டை நாடுகள் முதலீட்டின் மூலமாக தங்கள் வசப்படுத்த அனுமதிக்க கூடாது என்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் இந்திய அரசு அண்டை நாடுகளுக்கு  புதிய முதலீட்டு கொள்கையை வெளியிட்டது.

முதலீட்டுக்கான அனுமதி பெறாமல் நேரடியாக முதலீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள துறைகளில் கூட இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றில் சேர்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு முன் கூட்டியே ஒப்புதல் பெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தானையும் சீனாவையும் இந்தியா பாரபட்சமாக நடத்துகிறது. இந்தியாவின் இந்த வித்தியாசமான அணுகுமுறை குறித்து உலக சுகாதார நிறுவனத்தில் புகார் செய்வேன் என்று சீனா கூறியுள்ளது.

இந்தியாவின் அண்டை நாடுகள் இந்திய தொழில் நிறுவனங்களை குறிவைத்து தங்கள் வசப்படுத்துவதற்காக முதலீடு செய்வதாக ஆய்வு நிறுவனங்கள் அறிக்கை தந்துள்ளன. அதன் காரணமாக அண்டை நாடுகள் இந்திய நிறுவனங்களை வசப்படுத்துவதை தடுப்பதற்காகவே  இந்த முதலீடு தொடர்பான புதிய அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக இந்தியா கூறியுள்ளது.

ஏற்கனவே செய்துள்ள முதலீட்டை விரிவுபடுத்துவது இருந்தாலும் புதிதாக முதலீடு செய்வதாக இருந்தாலும் இந்திய அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகுதான் முதலீடு செய்ய வேண்டும் என இந்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்தப் புதிய விதி காரணமாக இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பிய 50 சீன நிறுவனங்கள் இந்திய அரசுக்கு மனு செய்துள்ளன.

ஒருபுறம் பொருளாதாரத் தேக்கநிலை, மறுபுறம் கரோனா வைரஸ் தொற்று காரணமாக விற்பனை சந்தை வாய்ப்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு உள்ளன. அதன் காரணமாக மிகவும் கவனத்தோடு ஒவ்வொரு முதலீட்டுக்கான கோரிக்கையையும் பரிசீலிக்கிறோம் என்று பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய தொழில் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவில் முதலீடு செய்ய விண்ணப்பித்துள்ள சீன நிறுவனங்களின் பெயரையும் எந்தெந்த இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய விண்ணப்பித்துள்ளன என்ற தகவலையும் தெரிவிக்க இந்திய அதிகாரி மறுத்துவிட்டார்.

இந்தியாவில் ஏற்கனவே சீன நிறுவனங்களின் முதலீடு 2600 கோடி டாலரை தாண்டியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.