ஆளுநர் புரோகித்துடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு - நோய்த்தொற்று நடவடிக்கைகள்குறித்து விளக்கம்

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 19:19

சென்னை,

கொரோனா வைரஸ் தடுப்பு முழு ஊரடங்கு மற்றும் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி விளக்கமளித்தார்.

கொரோனா நோய்த்தொற்று அச்சுறுத்தலை தொடர்ந்து  கடந்த மார்ச் 25 ம்தேதி மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசும் ஊரடங்கு  உத்தரவை பிறப்பித்தது, தற்போது கடந்த ஜூலை 1 ம்தேதி முதல்  ஆறாவது முறையாக ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இந்த முறை சற்று கடுமையாக  ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, மதுரையில் ஜூலை 6 மதேதி முதல் 12 ம்தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 5 மணிக்கு  சென்னை கிண்டி ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார், அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் க. சண்முகம், டிஜிபி திரிபாதி, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கவர்னரை சந்தித்து பேசினார், 

இந்த சந்திப்பில் கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள்,  மருத்துவமனைகளில்  உயிரிழப்பு மற்றும் குணமடைந்தோர் விபரங்கள், ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகள், சென்னையில் நடைபெற்று வரும் காய்ச்சல் கிளினிக்,  நடமாடும் மருத்துவ முகாம்கள் பரிசோதனை விவரங்கள் குறித்த விரிவான அறிக்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  ஆளுநரிடம் வழங்கினார்.

இந்த சந்திப்பில் சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சருடன் டிஜிபி திரிபாதி விளக்கியதாக கூறப்படுகிறது.

கவர்னருடனான முதலமைச்சரின் இந்த சந்திப்பு கொரோனா காலக்கட்டத்தில் நான்காவது முறை என்பது குறிப்பிடத்தக்கது,