சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தப்பிய கார் சென்னையைச் சேர்ந்தவருடையது * சிபிசிஐடி விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 18:15

சென்னை, ஜுலை. 5–

தந்தை, மகனை அடித்துக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தப்பியோடிய கார் சென்னையைச் சேர்ந்த கேட்டரிங் தொழிலதிபருடையது என்று சிபிசிஐடி போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கார் உரிமையாளரை விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் தற்போது கையிலெடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி ஐஜி சங்கர், எஸ்பி விஜயகுமார் மேற்பார்வையில் டிஎஸ்பி அணில்குமார் தலைமையில் 12 தனிப்படைகள் தீவிரமாக விசாரைண மேற்கொண்டு வருகின்றனர், பென்னிக்ஸ், ஜெயராஜ் இருவரையும் அடித்துக் கொலை  வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக எஸ்ஐ ரகுகணேஷ் அவரையடுத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முத்துராஜ், முருகன் 3 உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.


இதில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டது சினிமா பாணியில் நடந்தது. கடந்த 2ம் தேதியன்று அதிகாலையில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் நெல்லையிலிருந்து தனது சொந்த ஊரான தேனிக்கு மாருதி ஸ்விப்ட் காரில் சென்று கொண்டிருந்தார். நெல்லைக்கு உள்ளே நுழைபவர்கள், நெல்லையிலிருந்து வேறு மாவட்டங்களுக்குச் செல்பவர்கள் கங்கை கொண்டான் சோதனைச் சாவடியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இ பாஸ் இல்லாமல் யாரையும் இங்கு போலீசார் அனுமதிப்பதில்லை. அந்த வழியாக ஸ்ரீதரை போலீசார் மடக்கிய போது அவர் இன்ஸ்பெக்டர் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டார்.  

சோதனையில் ஈடுபட்டவர்கள் அவர் கூறியதைக் குறித்து வைத்துக் கொண்டனர். அது தொடர்பாக உடனடியாக சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டிஎஸ்பி அணில்குமார் தலைமையிலான போலீசார் ஸ்ரீதர் காரை சினிமா பாணியில் விரட்டிச் சென்று சேசிங் செய்து கைது செய்தனர். ஸ்ரீதர் தப்பிய வெள்ளை நிற மாருதி ஸ்விப்ட் காரை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதன் பதிவெண் மூலம் அதன் உரிமையாளர் யார் என விசாணை நடத்திய போது அது சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஸ்நேகலதா என்பவருடையது என்று தெரியவந்தது. அவரது கணவர் சுரேஷ் குமாரை தொடர்பு கொண்ட சிபிசிஐடி போலீசார் அவரிடம் விசாரணை நடத்திய போது அதனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோயம்பேட்டை சேர்ந்த பைனான்சியர் பாண்டியன் என்பவரிடம் வாடகைக்காக கொடுத்தததாக தெரிவித்துள்ளார். அதனையடுத்து ஸ்நேகலதாவின் கணவர் சுரேஷ்குமாரை 6ம் தேதியன்று துாத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.


இது குறித்து சுரேஷ்குமார் கூறியதாவது, ‘‘நான் கேட்டரிங் தொழில் செய்து வருகிறேன். தமிழக பாஜ., கட்சியில் அமைப்புச்செயலாளராக உள்ளேன். கடந்த 2017ம் ஆண்டு உடல் சிகிச்சைக்காக பண தேவை ஏற்பட்டதால் எனது மாருதி ஸ்விப்ட் காரை கோயம்பேட்டைச் சேர்ந்த பாண்டியன் என்பவரிடம் வாடகைக்கு கொடுத்தேன். ஒரு சில மாதங்கள் மட்டுமே சரியாக வாடகை தந்த பாண்டியன் அதற்கு பிறகு என்ன ஆனார் என தெரியவில்லை. எனது கார் பற்றியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தெரியவந்தது. 3 ஆண்டுகளாக எனது கார் என்ன கதியில் உள்ளது என்பது பற்றி கவலையில் இருந்தேன். இந்நிலையில்தான் எனது காரில் சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தப்பியோடியதும், சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்தது பற்றியும் தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்து அதிர்ச்சியடைந்தேன். அந்த சமயத்தில் எனக்கு துாத்துக்குடி போலீசில் இருந்து விசாரணைக்கு வரும்படி தகவல் தெரிவித்தார்கள். காருக்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு காரை திரும்ப பெற்றுக்கொள்ளும்படி கூறியுள்ளார்கள். கார் வைத்திருப்பவர்கள் தயவு செய்து அவர்களது காரை வாடகைக்கு கொடுக்கும் போது முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் கொடுக்காதீர்கள். எனக்கு நடந்தது உங்களுக்கும் நடக்கலாம். எனது கார் சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது எனக்கு மன வேதனையை அளித்துள்ளது’’ என தெரிவித்துள்ளார்.