ஜம்மு காஷ்மீர் குல்காமில் துப்பாக்கி சண்டை: 1 தீவிரவாதி பலி

பதிவு செய்த நாள் : 04 ஜூலை 2020 15:32

குல்காம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பெல்காம் மாவட்டம் அரே கிராமத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது.

அரே கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை ஒட்டி அங்கு ராணுவத்தில் ராஷ்டிரிய ரைபிள்ஸ் படைப்பிரிவு வீரர்கள். மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள். ஜம்மு காஷ்மீர் போலீஸ் படையினர் ஆகியோர் கூட்டாக தேடுதல் வேட்டையை இன்று காலை துவக்கினார்கள்.

பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது சரமாரியாக சுடத் துவங்கினார்கள். பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதல் காரணமாக ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். நமது வீரர்கள் இருவர் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அந்த கிராமத்தில் 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் முதலில் கிடைத்தது. அதன் அடிப்படையில் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள வீட்டில் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து சண்டை நடந்து வருவதாகவும் பிற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் ட்விட்டரில் தகவல் வெளியிட்டுள்ளனர்.