சீன அதிகாரிகள். வங்கிகள் மீது பொருளாதார தடைகள் : அமெரிக்க மசோதா நிறைவேறியது

பதிவு செய்த நாள் : 03 ஜூலை 2020 20:09

வாஷிங்டன்

ஹாங்காங்கில் போராட்டம் நடத்தி வருவோரை ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டத்திற்காக சீனா மீது பொருளாதார தடைகளை விதிக்க வகை செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

சீனா நிறைவேற்றியுள்ள தேசிய பாதுகாப்பு சட்டம் ஹாங்காங்கின் சுயாட்சி உரிமையை பறிக்கக் கூடியது. ஹாங்காங்கின் சுதந்திரம் மற்றும் உரிமைகளை பறிக்க உதவுகிற சட்டத்தை அமுல் செய்ய அரசுக்கு உதவும் சீன அதிகாரிகள் மீதும் ஹாங்காங்கில் உரிமைகளுக்காக போராடுகிற மக்களை ஒடுக்க உதவுகிற அமைப்புகளுக்கு ஆதரவாக உள்ள நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மீதும் பொருளாதார தடைகள் விதிக்க அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா வகை செய்கிறது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா அடுத்து குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு செல்லும். இந்த மசோதாவிற்கு அங்கீகாரம் வழங்கி குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டது மசோதா சட்டமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா மீதான பொருளாதார தடை விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் டிரம்ப் ஒப்புதல் வழங்குவாரா என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் அந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். ஆனால் அமெரிக்க நாடாளுமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றியுள்ள மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் நிச்சயம் ஒப்புதல் தருவார் என்று ஆளும் குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறினார்.

 1997ஆம் ஆண்டு பிரிட்டனிலிருந்து ஹாங்காங் தனி உரிமை பெற்றது . ஆனால் சீனாவின் ஆட்சியின்கீழ் தான் இருக்கும் என்றும் ஒரு நாடு - இரண்டு ஆட்சிமுறைகள் என்ற திட்டத்தின் கீழ் தான் சுயாட்சி உரிமையோடு இயங்கிவரும் என்ற நிபந்தனையின் பேரில் ஹாங்காங்கிற்கு பிரிட்டன் சுதந்திரம் வழங்கியது. சீனா இப்பொழுது நிறைவேற்றியுள்ள தேசிய பாதுகாப்புச்சட்டம் ஹாங்காங்கின் சுதந்திரத்தையும் சுயாட்சி உரிமையையும் பறித்து விடும் என்று அமெரிக்கா, பிரிட்டன் உட்பட மேலை நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.