டிவி பேட்டி- எப்படிப்பட்ட கேரக்டரா இருந்தாலும் ஆக்டிங் ஸ்கோப் இருக்கணும்!- ’அம்மன்’ அமல்ஜித் திட்டவட்டம்

பதிவு செய்த நாள் : 03 ஜூலை 2020

சீரியல்களில்   சுமார்  11  ஆண்டுகளாக  ஒரு ஜூனியர்  ஆர்டிஸ்ட் ………..  அதன்பின்  இரண்டாவது  ஹீரோ …………..  இப்போது ஹீரோ!   இப்படி படிப்படியாக  முன்னேறியிருப்பவர்,  அமல்ஜித்.   ‘அம்மன்’  சீரியலின் (கலர்ஸ்  தமிழ்)  ஹீரோ.

அவர் நமக்கு அளித்த பேட்டி:-

சொந்த  ஊர்,  படிப்பு

          “எனக்கு  நேட்டிவ், கொல்லம்  ( கேரளா ).  அங்கே  ஆஸ்ரமம்னு  ஒரு ஏரியா இருக்கு.  அங்கேதான் நான் பிறந்தது வளர்ந்ததெல்லாம்.  அப்பா  பேரு,  அஜித்குமார்.  அவர் ஒரு கம்பெனியிலே டிரைவரா இருந்தவர்.  அம்மா  பேரு, லதா  அஜித்.  அவங்க ஒரு  ஹவுஸ்ஒய்ப்.  எனக்கு லிஜிதான்னு  ஒரு அக்கா இருக்காங்க. அவங்களுக்கு  கல்யாணமாகி திருவனந்தபுரத்திலே  இருக்காங்க. செயின்ட் அலாய்சிஸ் ஹை  ஸ்கூல்ல முதல்ல  படிச்சிட்டு, அதுக்கப்புறம், எம்எஸ்எம்  ஹையர் செகண்டரி ஸ்கூல்ல பிளஸ் 2 வரை படிச்சேன்.  அப்புறம் யூஐடி  காலேஜிலே  பிஎஸ்சி  (கம்ப்யூட்டர்  சயின்ஸ்)  படிச்சேன்.  டிகிரி  முடிச்ச பிறகு ஒரு கொரியர் கம்பெனியிலே நாலஞ்சு மாசமும்,  இன்னொரு கம்பெனியிலே ஆறேழு மாசமும் ஒர்க் பண்ணேன்.

ஜூனியர்  ஆர்டிஸ்ட்

         அப்பா  ஒரு மேடைநாடக  நடிகரா இருந்தவர்.   ஹீரோவா நடிக்கணும்னு அவருக்கு  பெரிய கனவு இருந்துச்சு. குடும்ப சூழ்நிலை  காரணமா  அதை விட்டுட்டு  வேற வேலை பார்க்க  ஆரம்பிச்சிட்டாரு.  அவரோட கனவு என் மூலமா நிறைவேறணும்னு அப்பாவுக்கு ரொம்ப  ஆசை.  நான் அஞ்சாவது படிக்கும் போது ஒரு படத்திலே நடிச்சேன்.  அங்கே  இருந்துதான் என் நடிப்புக்கான  அஸ்திவாரம் போடப்பட்டுச்சு.  அம்மாவும்  பாட்டியும் என்னை டிவி  சீரியல்  ஷூட்டிங்குகளுக்கு கூட்டிட்டு போவாங்க.  ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டா  சின்ன பசங்க கூட்டத்திலே இருக்கிற மாதிரி  2008ல நடிக்க ஆரம்பிச்சேன்.  அதிலே இருந்து நடிப்பு மேலே எனக்கு இன்டரஸ்ட்  வந்துச்சு. நான் ஒரு நடிகனா ஆகிறதுக்கு எங்க குடும்பமே  புல்  சப்போர்ட் கொடுத்துச்சு.  இப்போ,  நான் இந்த அளவுக்கு வ(ளர்)ந்திருக்கேன்னா,  அதுக்கு அவங்கதான் காரணம்.

’அம்மன்’  வாய்ப்பு

         அப்புறம் ஒரு காலகட்டத்திலே,  ஜூனியர் ஆர்டிஸ்ட்டா இருக்கிறதை விட்டுட்டு  மெயின் லீட் கிடைக்கணும்ங்கிறதுக்காக  டிக் டாக்ல ஈடுபட்டேன். அப்படி என்னோட மியூசிக்கல்  வீடியோசை  பார்த்துட்டுத்தான்  மூணு வருஷத்துக்கு முன்னாடி  ஒரு சீரியல்  ஆடிஷனுக்காக சென்னைக்கு  வர  சொல்லி  விஜய் டிவியிலிருந்து என்னை கூப்பிட்டாங்க.  ஆனா,  ஆடிஷன்ல நான் செலக்ட் ஆகலே.  அதன் மூலமா விஜய் டிவி  எக்சகியூட்டிவ் புரொடியூசர்  தில்லைநாதன் சார்கிட்ட  எனக்கு  ஒரு தொடர்பு  இருந்துக்கிட்டே இருந்துச்சு.  அவர்தான்  ‘அம்மன்’  சீரியலுக்கு  ரெக்கமன்ட்  பண்ணாரு.  ஆடிஷன்ல கலந்துக்கிட்டேன்.  டைரக்டர்  ரவிப்ரியன் சார்  என்னை செலக்ட் பண்ணி  தமிழ்ல அறிமுகப்படுத்தினாரு.  இதுக்கு முன்னாடி போன வருஷம் ‘த்ரீபதம்’ மலையாள சீரியல்ல ரெண்டாவது  ஹீரோவா அறிமுகமாகி நடிச்சேன்.  மழவில் மனோரமா டிவியிலே டெலிகாஸ்ட் ஆகி சமீபத்திலேதான் முடிஞ்சிச்சு.  இடையிலே  அஞ்சு  குறும்படங்கள்லயும் நடிச்சேன்.

ரொம்ப  கம்பர்ட்டபிள்

            ’அம்மன்’ல  என்னோட ‘டாக்டர்’ கேரக்டரை விளக்கி சொன்ன போதே எனக்கு அதை ரொம்ப பிடிச்சு போச்சு.  கேரக்டர்படி,  கடவுள் சக்தியை  நம்பமாட்டேன்.  அது ஒரு மூடநம்பிக்கைன்னு  நினைப்பேன்.   அறிவியலை மட்டுமே நம்புவேன்.  எல்லாமே அறிவியல்படிதான் நடக்குதுன்னு நினைப்பேன்.  ஹீரோயின் கடவுள் நம்பிக்கை உள்ளவங்களாவும்,  ஒரு கடவுள்  சக்தியாவும்   இருப்பாங்க.  அதனால எங்களுக்குள்ளே சின்ன சின்ன பிரச்னைகள் வரும்.  ஆனா,  போகப்போக  அறிவியல்,  கடவுள் சக்தி ரெண்டுமே இருக்குங்கிறதை  ஒத்துக்க ஆரம்பிப்பேன்.  இதை இந்த மாதிரி பண்ணா நல்லா இருக்கும்னு டைரக்டர் ரொம்ப நல்லா சொல்லி கொடுப்பாரு.  நிறைய ஐடியாக்கள் சொல்வாரு.  அப்புறம் செட்ல டைரக்டர், என் கூட  நடிக்கிறவங்க எல்லாருமே ரொம்ப பிரண்ட்லியாவும்,  கோ – ஆப்பரேட்டிவாவும் இருக்கிறதால  நடிக்கிறதுக்கு ரொம்ப கம்பர்ட்டபிளா  இருக்கு.

ஆக்டிங்  ஸ்கோப்

  இந்த மாதிரியான கேரக்டர்ல  நடிக்கணும்,  அந்த  மாதிரியான கேரக்டர்ல  நடிக்கணும்  அப்படியெல்லாம் எனக்கு  எண்ணம் கிடையாது.  என்னை பொறுத்தவரை,  எப்படிப்பட்ட  கேரக்டரா இருந்தாலும்,  நான்  பெர்பார்ம்  பண்ணணும்.  அதிலே நல்லா நடிக்கிறதுக்கான  வாய்ப்பு  இருக்கணும்.  என்னால முடிஞ்ச அளவுக்கு பெர்பார்ம்  பண்ணணும்.

சினிமா  ஹீரோ

   பியூச்சர்  பிளான்ஸ்ன்னு  பெருசா  எதுவும் இல்லே.  கண்டிப்பா  ஒரு சினிமா  ஹீரோவாகணும்,  சினிமாவிலே  நடிக்கணும்.

டிக்  டாக்

           எனக்கு  மெயின்  ஹாபி,  டிக் டாக்தான்.  நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதை பண்ணுவேன்.  டான்ஸ் பண்ணணும்னு ரொம்ப ஆசை.  அதனால  சின்ன லெவல்ல  டான்ஸ் பிராக்டீஸ்  பண்றதுண்டு.  அப்புறம், பிரண்ட்ஸ் கூட சுத்திக்கிட்டிருப்பேன். என் கேரியருக்கு  அவங்களோட  சப்போர்ட்டும் எனக்கு இருக்கு.

விஜய்,  மம்மூட்டி

            என்னோட   பேவரிட்  ஸ்டார்,  விஜய்.  அப்புறம் மலையாளத்திலே  பல நடிகர்களும்  பேவரிட்  ஸ்டார்ஸ்தான்.  அவங்கள்ல   மம்மூட்டி  ரொம்ப  ஸ்பெஷல்.

      -  ம.  வானமுதன்