இந்திய-சீன எல்லை பிரச்சினை நடைபெற்ற லடாக் பகுதிக்கு பிரதமர் மோடி திடீர் விஜயம்

பதிவு செய்த நாள் : 03 ஜூலை 2020 11:41

புதுதில்லி

இந்திய-சீன எல்லை பிரச்சினை நடைபெற்ற லடாக் பகுதிக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை திடீரென ஆய்வுக்காக சென்றார்.

இந்திய ராணுவ வீரர்கள், தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டு பேசிவருகிறார்.

கடல் மட்டத்தில் இருந்து 11,000 அடி உயரத்தில் உள்ள லடாக்கின் ஜன்ஸ்கர் பகுதியில் பிரதமர் மோடி இன்று ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

லடாக் எல்லையில் சீனாவுடனான பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று (ஜூலை 3ம் தேதி) காலை அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து வீரர்களிடம் கேட்டறிந்தார். பிரதமருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி நரவானே ஆகியோர் உடன் சென்றுள்ளனர்.

லடாக்கின் கிழக்கு பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இருதரப்பினரும் எல்லையில் படைகள் மற்றும் ஆயுதங்களை குவித்து வருகிறார்கள்.

லடாக் எல்லையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென்று அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடி, இன்று அதிகாலை லே பகுதியில் உள்ள நிமு பகுதிக்கு சென்றார். நிமு பகுதியானது, 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளதுடன், கடினமான நிலப்பகுதியை கொண்டது.

அங்கு, ராணுவம், விமானப்படை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்திய பகுதியில் செய்யப்பட்டுள்ள ராணுவ பாதுகாப்பு, வான்வெளி கண்காணிப்பு குறித்து பிரதமர் ஆய்வு செய்தார்.

அதன் பின் சீன வீரர்களுடன் நடந்த மோதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திக்சே பகுதி செல்லும் பிரதமர் அங்கு வீரர்கள் மத்தியில் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

லடாக்கின் லே பகுதிக்கு முப்படைகளின் தலைமை தளபதியுடன் பிரதமர் மோடி வருகை.