ஊரடங்கிலும் ஜூன் மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ. 90 ஆயிரம் கோடியைத் தாண்டியது

பதிவு செய்த நாள் : 01 ஜூலை 2020 14:41

புதுடில்லி.

கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்பதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும்  கடந்த, 2020, ஜூன் மாத மொத்த ஜி.எஸ்.டி., வரி வசூல் ரூ. 90 ஆயிரம் கோடியை தாண்டி உள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கின. அடுத்தடுத்த ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகளால் தொழில்துறைகள் கொஞ்சம் கொஞ்சமாக மீள தொடங்கின. ஊரடங்கு நாட்களில் ஏப்ரல் மாதத்திற்கான ஜி.எஸ்டி., வரி வசூலானது ரூ. 32,294 கோடியாகவும், மே மாதத்தில் ரூ. 62,009 கோடியாகவும் கிடைத்தது.

இந்நிலையில், ஜூன் மாத ஜிஎஸ்டி வரி வசூலானது சற்று அதிகரித்துள்ளது. கடந்த மாதத்தில் ரூ .90,917 கோடி ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், கடந்த ஆண்டு ஜூன் மாத வசூலை பொறுத்தவரையில் தொடர்ந்து 3வது முறையாக குறைந்துள்ளது. அதாவது, கடந்தாண்டு ஜூன் மாதத்தை விட 9 சதவீதம் அளவிற்கான ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரல், மே மாதங்கள் முறையே இந்தாண்டு 28, 62 சதவீதம் அளவிற்கு குறைந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஜூன் மாத வரி வசூலில் மத்திய ஜிஎஸ்டி - ரூ.18 ஆயிரத்து 980 கோடியும், மாநில ஜிஎஸ்டி - ரூ. 23 ஆயிரத்து 970 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி - ரூ. 40 ஆயிரத்து 302 கோடியும் வசூலாகியுள்ளது.

மாநில அரசுகளுக்கு இழப்பீடாக ரூ. 7,665 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது