ட்ரோன் பிரதாப்! -சுதாங்கன்.

பதிவு செய்த நாள் : 01 ஜூலை 2020

21 வயது இளைஞன் செய்திருக்கும் சாதனையைக் கண்டு சர்வதேச விஞ்ஞான உலகமே வியப்பில் ஆழ்ந்து போயிருக்கிறது. இவரது சாதனைகள் எந்த இந்திய ஊடக வெளிச்சத்திற்கும் வரவில்லை சில மாதங்களுக்கு முன்பு வரை!

கர்நாடகாவின் ஒரு குக்கிராமத்து இளைஞனை பிரதமர் அடையாளம் கண்டு கொண்டு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி அதாவது இஸ்ரோவின் ஒரு பிரிவான  ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இயக்ககத்தில் பணிக்கு சேர்த்துக் கொண்டபோது தான் இவரது சாதனைகள் வெளிச்சத்திற்கு வந்தது.

யார் இந்த இளைஞன்? செய்திருக்கும் சாதனை என்ன?

கொஞ்சம் பின்னோக்கிப் பார்ப்போம்.

இருபத்தோரு வயது இளைஞனான பிரதாப்!

இந்த இளைஞனைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்' ட்ரோன்' என்றால் என்ன? இந்த வார்த்தையும், கருவியும் பல வருடங்களாக புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் சமீபகாலமாகத்தான் இதன் மேல் ஒரு புகழ் வெளிச்சம் விழுந்தது. காரணம் இதில் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

ட்ரோன் (drone) இந்த ஆங்கில வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு.ஆனால் மிகச் சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் இது ஒரு ஆண் தேனீ - male bee!

ஆளில்லாத பறக்கும் சாதனம். இன்னும் புரியும் படியாக சொல்ல வேண்டுமானால் ஆளில்லா குட்டி விமானம்!


இதற்கு கொடுக்கப்படும் விளக்கம் தானியங்கி 'ஆளில்லா விமானம் அல்லது கப்பல்!. இதற்கு மனித கட்டுப்பாடு தேவை இல்லை. கையில் இருக்கும் ரிமோட் போதும்!

புதிய தொழில்நுட்பம் இந்த ஆளில்லா ஆகாய வாகனத்தை பல்வேறு விஷயங்களுக்கு பயனுள்ளதாக ஆக்கியிருக்கிறது. உயிர்களை காப்பாற்றுவோம், தீ விபத்து, உயரமான கட்டடங்களில் செய்யும் வேலைகள் எல்லாவற்றையும் இந்த ட்ரோன் செய்யும். இது பயிர்களை கண்காணிக்கும், நீர் கசிவுகளை கண்டுபிடிக்கும், அவசர நடவடிக்கைகள் தேவைப்படுபவர்கள் அடையாளம் காட்டும். உளவு வேலை செய்யும். இவை எல்லாமே மிகக் குறைந்த செலவில் இதைப் பயன்படுத்தி செய்ய முடியும்.

இந்த ஆளில்லா விமானத்திற்கும், ஒரு குக்கிராமத்தில் இளைஞனுக்கும் என்ன தொடர்பு? அங்கேதான் இளைஞன் பிரதாப்பின் கதை துவங்குகிறது.

இந்த இளைஞனுக்கு வயது 21 . இப்போது கொரானா தொற்று வருவதற்கு முன்புவரை மாதத்திற்கு குறைந்தது 28 நாட்கள் விமானத்திலேயே வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

இவர் பிறந்தது கர்நாடக மாநிலத்தில் கடைக்கோடியில் உள்ள ஒரு  குக்கிராமம். தந்தைக்கு விவசாயம். மாத வருமானம் சுமார் Rs.2000/-.

சிறு வயதிலேயே Electronics மேல் விருப்பம்

+2 படித்துக்கொண்டே Electronics துறையில்

இருந்த தாகத்திற்கும் இவர் தீனி போடத் தவறவில்லை.   drone சம்பந்தமான பல தகவல்களை தகவல்களை பல இணையதளங்கள் மூலமாக திரட்டிக் கொண்டு இருந்தார். பிறகு தன்னிடம் இருக்கும் சின்ன கருவிகள் மூலமாக அதை சோதனை செய்து பார்த்தார் பார்த்தார் .

இதுதொடர்பான தனது சந்தேகங்களை கேள்விகளாக்கி, உலகம் முழுவதிலுமுள்ள பல விஞ்ஞானிகளுக்கு மின்னஞ்சல் மூலமாக அனுப்பிக்கொண்டே இருந்தார். இத்தனைக்கும் இவருக்கு  ஆங்கில  சரளமாக, பிழையின்றி பேச, எழுத தெரியாது.

பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்க மிகுந்த ஆர்வம். ஆனால் குடும்பத்து பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. அதனால் சாதாரண கல்லூரியில் பிஎஸ்சி பிசிக்ஸ் பாடத்தில் சேருகிறார்.  3வது வருடம்  படிக்கும்போது கல்லூரி விடுதி கட்டணம் கட்ட முடியவில்லை. வெளியேற்றப்பட்டார் .தெருவில், நடை பாதைகளில்,, பேருந்து நிலையங்கள் தான் இவரது குடியிருப்பு!  நகரத்தையே பார்த்திராத இவருக்கு மைசூர் பேருந்து நிலையம் ஒரு மாளிகையாகவே இருந்தது இருந்தது . குளியல், துணிகளைத் துவைத்தல் அங்கிருந்தபடியே நடத்தி கல்லூரி படிப்பு தொடர்ந்தது.

கிடைக்கிற நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுப்பார். கிடைத்த வருமானம் 20 ரூபாய்கள். அந்த வருமானத்தைக் கொண்டே ஒரு பறக்கும் எந்திரத்தை குறைந்த செலவில் தயாரிக்க வேண்டும் என்கிற வெறி உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தது. அது ட்ரோன் என்பதுகூடத் தெரியாது. மிகவும் கஷ்டப்பட்டு சில கணினி வகுப்பில் சேர்ந்து அனைத்திலும் தேர்ச்சி பெற்றார்.

அவர் மனதில் தோன்றிய அந்தப் பறக்கும் எந்திரத்தை தயாரிக்க குப்பை மேடுகளில் கிடைத்த பொருட்களைக் கொண்டு அவருடைய பறக்கும் எந்திரம் தயாரிக்கும் செலவு 40% குறைத்தார்.

ஆனாலும் பலமுறை முயன்றும் அவருடைய பறக்கும் எந்திரம் பறக்கவில்லை. ஆனாலும் மனம் தளராமல் முயன்றார். என்பதாவதுமுறை வெற்றி கண்டார். அதற்குப் பிறகுதான் தான் கண்டுபிடித்த கருவியின் பெயர் டரோன் என்பது அவருக்குத் தெரிந்தது. பிறகு ஐஐடி நடத்தும் ட்ரோன் போட்டியில் கலந்துகொள்ள, முன்பதிவு செய்யப்படாத ரயிலில் மூன்று நாட்கள் பயணம் செய்து டெல்லிக்குப் போகிறார். முடித்துக் கொள்ளக்கூட சரியான உடைகள் கிடையாது. அந்தப் போட்டியில் இவருக்கு இரண்டாவது பரிசு! பட்ட துன்பங்கள் எல்லாம் மறந்து போகிறது.

அடுத்து ஜப்பானில் இதேபோன்ற போட்டி என்கிற தகவல் கிடைக்கிறது. ஆனால் அந்த நாட்டிற்குச் செல்ல பாஸ்போர்ட், விசா வாங்க வேண்டும் என்பது கூட தெரியாது.

உடனே அந்த முயற்சியில் இறங்குகிறார். தன் பள்ளி சான்றிதழை அடமானம் வைக்கிறார். சில நலம் விரும்பிகளும் உதவ ஜப்பான் போக தயாராகிறார். அந்த சூழலில் இன்னொரு சிக்கல் உருவானது.

ஜப்பான் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு பேராசிரியரின் சான்றிதழ் தேவை. சென்னைக்கு கிளம்ப முடிவு செய்கிறார். கையில் இருப்பதோ 300 ரூபாய்! தனக்குத் தெரியாத சென்னையில் வந்து கால்பதித்தார். ஒரு பேராசிரியரை கண்டுபிடித்தார். ஆனால் முதல் நான்கு நாட்கள் அந்தப் பேராசிரியரை சந்திக்க முடியவில்லை. கையில் இருந்த காசு கரைந்து கொண்டிருந்தது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே தங்கி. ஒருவழியாக பேராசிரியரை சந்திக்கிறார். தன் கையிலிருந்த திட்ட அறிக்கையை ( project report) பார்த்த பேராசிரியர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

'உன் படிப்பிற்கும்,நீ செய்திருக்கும் இந்த ஆராய்ச்சிக்கும் தொடர்பில்லை'என்று சொல்லி சான்றிதழ் அளிக்க மறுத்து விடுகிறார். ஒரு வேளை உணவு, சில நாள் பட்டினி, இப்படியாக 30 நாட்கள் சென்னையில் தங்கி அதே பேராசிரியரிடம் போராடி சான்றிதழ் பெறுகிறார்.

 Project reportஐ பார்த்த அந்த professor புண்ணியம் கட்டிக் கொள்கிறார்.

இந்திய நாட்டின் சார்பாக  ஜப்பானில் நடக்கும் இந்த போட்டியில்  கலந்து கொள்ள பயணச்செலவு  (குறைந்தபட்சம்) Rs.60000 மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு பலமுறை மனுச் செய்தும் பயனில்லை.

மைசூரில்  ஒரு சுவாமிஜி விமான பயணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். எடுத்துக் கொடுக்கிறார். மற்ற செலவுகளை சமாளிக்க தாயின் கழுத்தில் இருந்த தாலி அடமானம் வைக்க உதவியாக இருந்தது.

ஜப்பானின் டோக்கியோ போனார். கையில் இருக்கும் காசில் புல்லட் ரயிலில் பயணம் செய்ய முடியாது. சாதாரண ரயிலில் சில கிலோ மீட்டர் தூரம் பயணம். பின்னர் கால்நடையாக இன்னும் சில கிலோமீட்டர். இப்படியாக ஐந்து நாட்கள் கழித்து குறிப்பிட்ட நேரத்தில் போட்டி நடக்கும் இடத்திற்கு சென்றடைந்தார்.

127 க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து போட்டியாளர்கள். 70 இடங்களுக்குள் வந்தால்தான் கொஞ்சம் அங்கீகாரம் கிடைக்கும். பல சுற்றுகள் கடந்து, எதிலும் அவர் பெயர் இல்லாமல், இறுதியாக முதல் பரிசு இடத்திற்கு வந்தபோது இவர் பெயர் அழைக்கப்பட்டது. மகிழ்ச்சியும் உணர்ச்சியும் பொங்க கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட போய் பரிசை வாங்குகிறார். பரிசுத்தொகை 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள்.

சில நிமிடங்களில் உலகப் பிரபலமானார்.  அடுத்து பிரான்சில் நடந்த ஒரு போட்டியிலும் முதல் பரிசு!

ஊர் திரும்பியதும் கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் வீடு நோக்கிப் படையெடுக்கிறார்கள். பிரதமர் அழைக்கிறார்.

பல நாடுகளிலிருந்து மிக அதிகமான சம்பளத்திற்கு இவரை எடுத்துக்கொள்ள பல முயற்சிகள் செய்தது. வெளிநாட்டு வேலையை முற்றிலும் மறுத்துவிட்டார்.

மிகக் குறைந்த செலவில் இவர் தயாரித்திருக்கும் இந்த ட்ரோன் உலக நாடுகளை கவர்ந்தது.

பிரதமர் மோடி அழைத்து விருது கொடுத்து இஸ்ரோவின் ஒரு பிரிவில் இணைந்து பணியாற்றும் வேலையையும் உடனே கொடுத்தார். இப்போது அந்தப் பிரிவில் இருக்கும் மிகச்சிறிய விஞ்ஞானி அந்த கிராமத்து இளைஞன் பிரதாப் தான்!.


கட்டுரையாளர்: சுதாங்கன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation