உய்கூர் முஸ்லிம் பெண்களுக்கு கட்டாய கருத்தடை செய்யும் சீனா

பதிவு செய்த நாள் : 30 ஜூன் 2020 14:47

பீஜிங்,

சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் உய்கர் முஸ்லிம் இனத்தை சேர்ந்த பெண்களுக்கு, கட்டாய கருத்தடை செய்வதில், சீன அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கி ஒட்டிய எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஜின்ஜியாங்கில் வசிக்கும் சிறுபான்மை இனத்தை சேர்ந்த உய்கூர் முஸ்லிம்கள் மீது பல மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை சீன அரசு எடுத்து வருவதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அவர்களின் மொழி, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை அழிக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான உய்கூர் முஸ்லிம்கள் தனிமை முகாம்களில் அடைக்கப்பட்டு கொடுமைப் படுத்தப்படுகின்றனர். அவர்கள் மீது சீனாவின் கம்யூனிச கலாச்சாரம் வலுக்கட்டயமாக திணிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

ஆனால் இதை சீன அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. எல்லையில் பயங்கரவாதம் தலைதூக்காமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உய்கூர் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சியில், சீன அரசு, கடந்த சில ஆண்டுகளாகவே, தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறுபான்மை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு, சீன அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று அதிரடிச் சோதனைகளை நடத்தி வருகின்றனர். எந்த வீட்டிலாவது இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு செலுத்த முடியாத அளவுக்கு அபராதம் விதிக்கின்றனர். அபராதம் செலுத்தாதவர்களை வலுக்கட்டாயமாக தடுப்பு முகாம்களில் அடைக்கின்றனர்.

மேலும், திருமணமான சிறுபான்மையின பெண்கள் கர்ப்பமானால், அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர்.

குழந்தை பெற்ற பின் அந்த பெண்களுக்கு கருத்தடை சாதனங்களை பொருத்துவது, மருந்து, மாத்திரை கொடுத்து கருகலைப்பது போன்ற கொடூரமான நடவடிக்கைகளிலும் சீன அதிகாரிகள் ஈடுபடுவதாக, தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உய்கூர் மக்கள் கூறுகையில், ‘‘மூன்று குழந்தைகள் வரை பெறுவதற்கு எங்களுக்கு சீன சட்டம் அனுமதி அளித்துள்ளது. ஆனால், அதிகாரிகள் அதை பொருட்படுத்தாமல், எங்கள் மக்கள் தொகையை குறைப்பதில் தான் கண்ணாக இருக்கின்றனர்” என தெரிவித்துள்ளனர்.

ஜின்ஜியாங் மாகாணத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், வறுமையும், பழமைவாதமும் அதிகரிக்கிறது. இந்த அபாயகரமான போக்கை தடுக்கவே கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிவதாக சீன அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.