சீன இறக்குமதியை நிறுத்த போவதாக டிடிகே பிரஸ்டீஜ் நிறுவனம் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 23:04

சென்னை,

இந்தியாவின் மிகப்பெரிய சமையலறை உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனமான டிடிகே. பிரஸ்டீஜ் (TTK Prestige) வரும் செப்டம்பர் மாதம் முதல் சீன இறக்குமதிகளை நிறுத்த போவதாக அறிவித்துள்ளது. சீனாவுடனான எல்லை மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘‘எங்கள் தற்போதைய ஆர்டர்களை நிறைவேற்றிய பின் சீனாவில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதில்லை என முடிவு செய்துள்ளோம். நாங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்த பொருட்களை இனி உள்நாட்டில் உற்பத்தி செய்வோம். இல்லையென்றால் வியட்நாம் அல்லது துருக்கி போன்ற பிற சந்தைகளை அணுகுவோம்" என்று டி.டி.கே. பிரெஸ்டீஜ் நிறுவனத்தின் தலைவர் டிடி ஜகன்னாதன்  கூறினார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்நிறுவனம் அதன் மூன்றில் ஒரு பகுதியை அல்லது சாதனங்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்து கொண்டிருந்தது. தற்போது அதன் அனைத்து தேவைகளிலும் 10 சதவீதம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.