உ.பியில் ஆக்சிஜன் சிலிண்டருடன் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவி 69% தேர்ச்சி

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 23:02

பிராக்யராஜ்,

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பகுதியை சேர்ந்த சாஃபியா ஜாவெத் என்ற மாணவிக்கு தீவிர நுரையீரல் பாதிப்பு உள்ளது. எனவே அவர் சிறப்பு அனுமதி பெற்று ஆக்சிஜன் சிலிண்டருடன் தன் 10ம் வகுப்பு பொது தேர்வை எழுதினார். தற்போது தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சாஃபியா ஜாவெத் 69 சதவீத மதிப்பெண்கள் பெற்று 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

16 வயதாகும் சாஃபியா ஜாவத், தன் குடும்பத்தில் 3 பிள்ளைகளில் மூத்தவர். படிப்பில் அதிக ஆர்வம் கொண்ட சாஃபியா வகுப்பில் முதல் மாணவியாக இருந்து வந்தார்.

ஆனால் 5 ஆண்டுகளுக்கு முன் அவர் தீவிர நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். இதனால் பல மாதங்கள் படுத்த படுக்கையாக கிடந்த சாஃபியாவுக்கு தினமும் செயற்கை முறையில் ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் சாஃபியா தன் பள்ளிப்படிப்பை கைவிடும் சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் சாஃபியா வீட்டில் இருந்தப்படியே தொடர்ந்து பாடம் படித்து வந்தார்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த 10ம் வகுப்பு பொதுதேர்வில் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று சாஃபியா ஜாவத் ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்து தேர்வெழுதினார். அவரது இந்த விடா முயற்சி  சமூக ஊடகங்களில் வைரலானது.

தற்போது உத்தபிரதேசத்தில் 10ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் சாஃபியா ஜாவத் 69 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

அவர் ஓவியத்தில் 82, ஆங்கிலத்தில் 77, சமூக அறிவியலில் 68 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

மோசமான உடல்நிலையிலும் தங்கள் மகள் பெற்ற வெற்றியை நினைத்து அவரது பெற்றோர் பெருமை அடைந்துள்ளனர்.