அமெரிக்க அதிபர் டிரம்பை கைது செய்ய பிடிவாரண்ட் : ஈரான் அரசு நடவடிக்கை

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 23:01

டெஹ்ரான்,

ஈரான் ராணுவ தளபதி குவாசம் சோலெய்மணி கொல்லப்பட்ட வழக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட 30 பேரை கைது செய்ய ஈரான் அரசு பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது.

ஈரான் அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது முதல் இருநாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஜனவரி 3ம் தேதி ஈரான் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமானநிலையம் அருகே வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரானின் செல்வாக்கு மிக்க ராணுவ தளபதியான ஜெனரல் குவாசம் சோலெய்மணி கொல்லப்பட்டார்.

ஈரானில் நடைபெற்ற இந்த தாக்குதல் இருநாடுகள் இடையேயான சூழ்நிலையை மேலும் மோசமாக்கியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈராக்கில் இருந்த அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் ஜெனரல் குவாசம் சோலெய்மணியை கொன்ற தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட பலரை ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் அதிபர் டிரம்ப் உட்பட இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய ஈரான் அரசு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. மேலும் இவர்கள் அனைவரையும் கைது செய்ய சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போல் (Interpol) உதவியை ஈரான் அரசு நாடியுள்ளது.

கடந்த ஜனவரி 3ம் தேதி நடைபெற்ற தாக்குதலுக்கு காரணமான அதிபர் டிரம்ப் உள்ளிட்ட 30 பேர் மீது கொலை மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணை நடத்தப்படும் என ஈரான் அரசின் மூத்த வழக்கறிஞர் அலி அல்குவாசிமெஹ்ர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாக ஈரான் நாட்டு செய்தி நிறுவனமான ஐ.எஸ்.என்.ஏ (ISNA) செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் டிரம்பை தவிர இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை அலி அல்குவாசிமெஹ்ர் தெரிவிக்கவில்லை.

அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் முடிந்த பின்பும் அவர் மீது விசாரணை தொடரும். அதிபர் டிரம்ப் உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய இன்டர்போல் நிறுவனம் சிவப்பு நோட்டீஸை பிறப்பிக்க வேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக அலி அல்குவாசிமெஹ்ர் கூறியுள்ளார்.

இன்டர்போலின் சிவப்பு நோட்டீசின் கீழ் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ள நாட்டின் சார்பில் சம்பந்தப்பட்ட நபரை உள்ளூர் அதிகாரிகள் கைது செய்யலாம். குறைந்தப்பட்சம் அரசாங்கங்கள் அவர்களது பயணங்களை கட்டுப்படுத்தலாம்.

ஆனால் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்யும்படியோ நாடு கடத்தும்படியோ எந்த நாட்டையும் இன்டர்போல் அமைப்பால் நிர்பந்திக்க முடியாது.

மேலும் இன்டர்போல் அமைப்பின் கொள்கை அரசியல் தலையீட்டிற்கும் அரசியல் ரீதியான  நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கிறது. எனவே ஈரான் அரசின் கோரிக்கையை இன்டர்போல் அமைப்பு ஏற்காது என நம்பப்படுகிறது.